தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நாவற்குழியில் நேற்று சனிக்கிழமை (27.01.2024) இடம் பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நாவற்குழி முத்தமிழ் சனசமூக நிலைய முன்றலில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் கனடா இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் ந. கேதீஸ்வரசிவம், செ. கிருஸ்ணகோபால், கு. கல்யாணசுந்தரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டிருந்தார்கள்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களுக்குச் சூழல் அறிவைப் புகட்டி, அவர்களிடையே சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாக, அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்கேற்பாளர்களாக்கும் நோக்குடன் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டத்தைக் கிராமங்கள் தோறும் முன்னெடுத்து வருகிறது. இதன் தொடராகவே நாவற்குழியில் இந்நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் அதிக எண்ணிக்கையான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் கனடா ரொறன்ரோவின் மனிதநேயக்குரல் அமைப்பின் அனுசரணையுடன் சூழல் விழிப்புணர்வு அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.