வடமராட்சி மருதங்கேணி தொடக்கம் பருத்தித்துறை வரையிலான பிரதான வீதி பலவருடங்களாக மோசமடைந்து காணப்படுவதாக மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.மருதங்கேணி தொடக்கம் பருத்தித்துறை வரையான மக்கள் பாவிக்கும் பிரதான வீதியாக மருதங்கேணி வீதியே காணப்படுவதனால் இவ்வாறான மோசமான வீதியால் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு பல இன்னல்களையும் சவால்களையும் எதிர்நோக்குவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை வைத்தியர் நி.நரேந்திரன் கருத்து தெரிவிக்கையில்மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையையும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையையும் இணைக்கும் பிரதான வழித்தடமாக காணப்படும் இப்பாதை மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளதால் அவசர நோயாளிகளை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கு நோயாளிக்கான உயிர்காப்பு நேரம் தாமதமடைவதோடு, பல இடர்களையும் எதிர்நோக்கவேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் இந்த வீதியினால் வீதிவிபத்துக்களையும் மக்கள் எதிர்கொள்கின்றார்கள் எனத்தெரிவித்தார்.மேலும் அன்றாட தேவைக்காக இவ்வீதியை பயன்படுத்துவோர் மழைகாலங்களில் பல்வேறுபட்ட ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர்.எனவே இவ்வீதியின் அவசியம் கருதி உடனடியாக இவ்வீதியை புணரமைத்துத்தருமாறு சம்மந்தப்பட்ட அரச திணைக்களங்களிடம்,சம்மந்தப்பட்ட பிரதேச அரசியல்வாதிகளிடமும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டால் அவசர வெளியேற்றத்துக்குரிய மார்க்கமாகவும் கூட இந்த பிரதான வீதியே காணப்படுவதனால் உரிய முறையில் இவ்வீதியினை திருத்தியமைப்பது அத்தியாவசிய தேவையாகவுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.