வடக்கு கிழக்கில் 148,848 வீடுகள் நிர்மாணம்!

ஆங்கிலே யரின் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திரம் எனும் காற்றை சுவாசித்த எமது நாடு அதன் பின்னரான நான்கு தசாப்தங்களாக முகங்கொடுத்த யுத்தத்திலிருந்து மீண்டு ஆறுதல் அடைந்தாலும் கூட பூரணமாகத் தீர்க்கப்படாத பல பிரச்சினைகளையோ அல்லது தேவைகளையோ நாம் காணக் கூடியதாக இருந்தது.

இவ்வாறான கால கட்டத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சை பொறுப்பேற்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசம் தற்போது நன்றாக அபிவிருத்தி அடைந்து வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் முக்கியமான ஒன்றுதான் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியயேற்றுதல் ஆகும்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட மோதல் காரணமாக இடம் பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றி அவர்களுக்குத தேவையான நிவாரணங்களை வழங்கி மக்கள் வாழ்வை மேம்படுத்தக்கூடிய செயல் திறனான பயனுள்ள அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம்; கௌரவமான பாதுகாப்புமிக்க மக்கள் சமூகம் ஒன்றை உறுதிப்படுத்தல் இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

அதில் முக்கியமான திட்டமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு கல் மற்றும் சாந்தைப் பயன்படுத்தி நிரந்தர வீடை நிர்மாணிக்கும் வேலைத் திட்டத்தைக் கூறலாம்.

அதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 27,322 வீடுகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 28,619 வீடுகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 29, 762 வீடுகளும் வவுனியா மாவட்டத்தில் 23,068 வீடுகளும் மன்னார் மாவட்டத்தில் 16,227 வீடுகளும் திருகோணமலை மாவட்டத்தில் 10,039 வீடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 12,098 வீடுகளும் அம்பாறை மாவட்டத்தில் 1,713 வீடுகளுமாக மொத்தம் 148,848 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த நிரந்தர வீடமைப்புத் திட்டத்தில் பயனாளர்களினால் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படும். இதற்கான கண்காணிப்பு மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து பணியாற்றும் தொழிநுட்ப அதிகாரியினால் வழங்கப்படும்.

இந்த செயற்றிட்டத்தின் கீழ் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 600,000 ரூபாயும் இரண்டு உறுப்பினர்களை விட அதிகமான உறுப்பினர்களை கொண்ட குடும்பங்களுக்கு 1,000,000 ரூபாயும் வழங்கப்படும்.

அதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் 7,671 வீடுகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 952, முல்லைத்தீவு மாவட்டத்தில் 223 வீடுகளும் வவுனியா மாவட்டத்தில் 2,183 வீடுகளும் மன்னார் மாவடத்தில் 526 வீடுகளும் திருகோணமலை மாவட்டத்தில் 3,500 வீடுகளும் மட்டக்களப்பு 3,214 வீடுகளும் அம்பாறை மாவடத்தில் 2,007 வீடுகளுமாக நிர்மாணிக்க வேண்டிய வீடுகளின் மொத்த எண்ணிக்கை 20,276 ஆகும்.

2024 ஆம் ஆண்டில் இந்த செயற்றிட்டத்திற்காக 1,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இந்த ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு 600 ,000 ரூபாய் பெறுமதியான 833 வீடுகளும் 1,000,000 ரூபாய் பெறுமதியான 1000 வீடுகளையும் நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 694 வீடுகளும், கிளிநொச்சி மாவட்டத்தில், 86 வீடுகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில், 20 வீடுகளும் வவுனியா மாவட்டத்தில் 197 வீடுகளும், மன்னார் மாவட்டத்தில் 48 வீடுகளும், திருகோணமலை மாவட்டத்தில் 316 வீடுகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 291 வீடுகளும், அம்பாறை மாவட்டத்தில் 181 வீடுகளுமாக மொத்தம் 1,833 வீடுகள் 2024 ஆம் ஆண்டில் நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படும் இரண்டாவது செயற்றிட்டமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தை கூறலாம்.

2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களின் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிரந்தர வீடு நிர்மாணிக்கும் செயற்றிட்டத்திற்கு சமாந்தரமாக அவர்களை மீள்குடியேற்றும் போது அத்தியாவசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்படி, 2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பூர்த்தி செய்யப்பட்டிருக்கும் செயற்றிட்டங்களின் எண்ணிக்கை 90,270 ஆகும். இதற்காக 10,848,92 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

குடி நீர் இணைப்பு, குழாய் கிணறு நிர்மாணிப்பு, பொதுக் கிணறு நிர்மாணித்தல், விவசாயக் கிணறு நிர்மாணித்தல், வீட்டு மின் இணைப்பு, வாழ்வாதார அபிவிருத்தித் செயற்றிட்டம், மலவசலகூட வசதிகள், கல்விச் செயற்றிட்டம், உள்ளக வீதி, சுகாதாரம், சிறு குளங்களின் மறுசீரமைப்பு, ஏனைய செயற்றிட்டங்கள், காணி கொள்வனவு, TFR செயற்றிட்டம், ஆகிய அத்தியாவசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டத்தினுள் அடங்கும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் வாழும் பிரதேசங்களில் சிறுநீரக நோயாளர்கள் அதிகளவில் பதிவாவதாக சுகாதாரப் பிரிவினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு சுத்தமான குடிநீர் வழங்கும் வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பது மிகவும் பிரதான காரணம் என இனங்காணப்பட்டுள்ளது.

“அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்” என்ற அரசின் கருத்தின் கீழ் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதிப் பங்களிப்பில் சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு 50 நனோ தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை நிர்மாணிக்கும் செயற்றிட்டம், அந்த தொழில்நுட்ப வசதி உள்ள தேசிய நீர் வழங்கல் திணைக்களத்தினால் முன்னெடுப்பதற்கு 2021 ஆம் ஆண்டில் முதல் கட்டமாக வடக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த செயற்றிட்டத்தின் ஊடாக 27,444 குடும்பங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனடிப்படையில; கிளிநொச்சி மாவட்டத்தில் 23, வவுனியா மாவட்டத்தில் 23, முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்குமாக நனோ தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பின் மொத்த எண்ணிக்கை 50 ஆகும். இதில் முழுமையாகப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட 25 நனோ நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளன. இந்த செயற்றிட்டத்திற்காக திட்டமிடப்பட்ட முழு ஒதுக்கீடு 211,669,403.67 ரூபாவாகும். இதுவரை செலவிடப்பட்ட முழுத்தொகை 125,678,182.44 ரூபாய் ஆகும். எஞ்சியிருக்கும் 25 நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளின் பணிகளை நிறைவுசெய்து இந்த வருட இறுதிக்குள் மக்கள் மயப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews