யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4 ஆம் திகதியினை கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி கிளிநொச்சி நகரில் முன்னெடுக்கவுள்ள பேரணிக்கு தமிழ் மக்கள் கூட்டணி தனது பூரண ஆதரவினைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்திக் குறிப்பில், 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதியானது ஒற்றையாட்சி என்ற விருச்சத்தின் கீழ் அதிகாரம் முழுவதையும் பெரும்பான்மை சிங்களவரிடம் கொடுத்து மதம், மொழி, இனம் போன்ற பேரினவாத கொள்கைகளை சிறுபான்மை இனத்தின் மீது மக்கள் தொகை பலத்தின் மூலம் பெரும்பான்மை சிங்கள மக்கள் திணிக்க ஏதுவாகவிட்டுச் சென்ற நாள்.
சிங்கள பெரும்பான்மையின் கோரமுகம்
இவ்வாறு அதிகாரம் சிங்கள பெரும்பான்மையாளர்களிடம் கையளிக்கப்பட்ட பிறகு அதன் கோரமுகம் தெரிய ஆரம்பித்தது.
இங்கிலாந்தின் காலணித்துவத்திலிருந்து இலங்கை விடுபட்ட பின்னர் மாறி மாறி ஆட்சி பீடம் ஏறிய சிங்கள பௌத்த பேரினவாத அரசுகள் தமிழ் மக்களை அடக்கி இனப்படுகொலை செய்து அவர்களின் பாரம்பரிய நிலங்களை எவ்வாறு அபகரிக்கலாம் என்று சிந்தித்து செயலாற்றினர்.
அதற்கு சிங்களப் படையினர் துணையாக நின்றனர். அதன் நீட்சியாக இன்றும் தமிழர்களுக்கு எதிரான கட்டமைப்பு சார் இனப்படுகொலை பல்வேறு வடிவங்களில் தொடருகின்றன. தமிழர் தாயகப் பிரதேசங்களில் அவர்களின் இருப்பினை இல்லாதொழிக்கும் நோக்குடன் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் மிக நுட்பமான முறையில் பறித்தெடுக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்களும் பௌத்த மயமாக்கல்களும் மிகத் தாராளமாக நடைபெறுகின்றன.
இனப்படுகொலைகளுக்கு தீர்வு
அதே நேரம் தமிழர்களை பொருளாதார ரீதியிலும் நலிவடையச் செய்யும் நோக்குடன் மட்டக்களப்பு மேச்சல் தரைகளை அத்துமீறி அபகரித்தல், எமது கடல் வளங்ளைச் சுரண்டுதல் போன்ற பல அடக்கு முறைகள் தொடருகின்றன.
இந்நிலையில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இக் கட்டமைப்பு சார் இனப்படுகொலைகளுக்கு தீர்வு காணும் வகையில் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக சமூகம் முன்னெடுக்கின்ற இப் போராட்டத்திற்கு நாம் பூரண ஆதரவினை தெரிவிப்பதோடு அனைத்து தரப்பினர்களும் இப் பேரணியில் கலந்து கொள்ளுமாறும் அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம் என்றுள்ளது.