சுதந்திர தினத்திற்கு ஆதரவு தெரிவித்து வன்னி மக்கள் ஒன்றியத்தினால் வாகன பேரணியொன்று இன்று (04.02.2024 ) காலை 09.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பெருமளவான பகுதிகளில் இலங்கையில் 76வது சுதந்திர தின நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட்டு கரிநாளாக அனுஷ்டிக்கப்பட்டுவதுடன் கறுப்பு கொடிகளையும் கட்டி தமது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்ற நிலையிலேயே சுதந்திர தினத்திற்கு ஆதரவாக இவ் வாகனப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
அனைத்து வாகனங்களிலும் தேசியக்கொடிகள் கட்டப்பட்டு 150க்கு மேற்பட்ட வாகனங்கள் பேரணியாக வவுனியா நகரை வலம் வந்திருந்திருந்தன . இப் பேரணியில் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்
வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகே ஆரம்பமான வாகனப்பேரணியானது ஏ9 வீதியூடாக ஹோரவப்போத்தானை வீதியினை வந்தடைந்து பஜார் வீதியூடாக மணிக்கூட்டு கோபுர சந்திக்கு வந்து மீண்டும் ஏ9 வீதியூடாக பயணித்து குடியகல்வுத் திணைக்கள வீதியூடாக சென்று புகையிரத நிலைய வீதியினை சென்றடைந்து , வவுனியா – மன்னார் பிரதான வீதியூடாக மீண்டும் பேரணி ஆரம்பித்த இடத்தினை சென்றடைந்திருந்தது.