உலகளாவிய முறைமை (Global System) வர்த்தகத்தால் கட்டமைக்கப்படுகிறது. இன்றைய பொருளாதாரம் வர்தகம் மற்றும் சந்தையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உலகம் பல நூற்றாண்டுகளாக கண்டறிந்த வடிவங்களுக்குள்ளால் நகர்ந்துவருகிறது. உலகத்தில் தோன்றிய அனைத்து கருத்தியலும் உலகளாவிய முறைமைக்கு சேவகம் செய்வதாகவே உள்ளது. உலகளாவிய வர்த்தகத்திற்குள்யேயே நாடுகளுக்கிடையிலான உறவு நிலவுகிறது. இலங்கைக்கும்-இந்தியாவுக்குமான உறவில் வர்த்தகம் அதிக முக்கியத்துவத்ரைத கொண்டதாக மாற ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே நிலவிய வர்த்தக உறவுகளை இலங்கை தந்திரோபாய ரீதியில் தோற்கடித்துள்ள போதும் இந்தியா தொடர்ச்சியாக வடிவமைக்க முயலுகிறது. குறிப்பாக இலங்கையின் பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்கு வர்த்தக ரீதியில் செல்வாக்கு செலுத்துவதற்கு வாய்ப்பினைக் கொடுத்துள்ளது. விடுதலைப் புலிகளதும் ராஜபக்ஷக்களினதும் வீழ்ச்சிக்கு உலகளாவிய முறைமை அடிப்படையாக இருந்துள்ளது என்பது கண்கூடே தெரிகின்ற விடயமாகும். இக்கட்டுரையும் இந்திய-இலங்கை உறவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களில் பொருளாதாரம் பெறும் முக்கியத்துவத்தினை தேடுவதாக அமையவுள்ளது.
இலங்கையின் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க கொச்சியிலிருந்து கொழும்பு வரை திரவ எரிவாயுக் குழாய்த்திட்டத்தை அமைக்கும் பணியை இந்தியா மேற்கொண்டுவருவதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ; ஜா தெரிவித்துள்ளார். இலங்கை -இந்திய இணைப்பு வழித்தடத்தை அமைப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதில் இந்தியா பணியாற்றிவருவதாகவும் இலங்கையின் மிகப் பெரும் வர்த்தகப் பங்காளியாக இந்தியா இருப்பதாகவும் அண்மிய ஆண்டுகளில் இலங்கையின் மிகப் பெரும் வெளிநாட்டு முதலீட்டு நாடாக இந்தியா விளங்குவதாகவும் குடியரசு தினவிழாவில் உரையாற்றும் போது ஜா தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி அவர் அங்கு உரையாற்றும் போது இந்த நிலையில் பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கையின் ஆதரவுகளையும் ஒத்துழைப்புகளையும் இந்தியா எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவு இந்தியாவால் முதன்மைப்படுத்தப்படுகிறது. கடந்த காலத்தில் அத்தகைய வர்த்தக உறவு காணப்பட்ட போதும் தற்போதைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் அதிகரித்துவருகிறது. இந்தியா எண்ணெய் எரிவாயு மற்றும் தரைவழி தொடர்புகளை வலுப்படுத்த பாரிய திட்டங்களை வகுத்து அமுல்படுத்த போவதாக வெளிப்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாது கப்பல் போக்குவரத்தையும் விமானப் போக்குவரத்தையும் வலுப்படுத்தும் நகர்வுகளில் ஈடுபட்டு வருகிறது. இலங்கைத் தீவின் வடக்கு பிராந்தியத்தை தரை, ஆகாயம் மற்றும் கடல்வழியாக ஒன்றிணைக்க பல்வேறு பொருளாதாரத் திட்டங்களை இந்தியா வகுத்துள்ளது. மன்னார்த் தீவுடன் இந்தியாவை இணைக்கும் தரைவழிப்பாதை நீண்டகாலத் திட்டமிடலாக அமைந்துள்ளது. அதனை புராணக்கதையுடன் தொடர்புபடுத்தும் இந்தியாவின் தற்போதைய பாரதீய ஜனதாக்கட்சியின் ஆட்சி அதனை சாத்தியப்படுத்த பிரயத்தனம் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. இலங்கையில் வலுவடைந்துவரும் இராமர் கருத்தியல் அத்தகைய தரைவழி தொடர்பை சாத்திப்படுத்த வாய்புள்ளதாகவே தெரிகிறது.
மறுபக்கத்தில் கொழும்புடனும் இந்தியா நெருக்கமான வர்த்தக உறவை வலுப்படுத்த முனைகிறது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தற்போதைய பாரதீய ஜனதாக்கட்சி அரசாங்கம் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் உதவியது மட்டுமல்லாது தொடர்ச்சியாக இந்திய இலங்கை இணைப்பினை முதன்மைப்படுத்தி வருகிறது. எரிவாயு பெற்றோலியம் மின்சக்தி என பலவிடயங்களில் பிணைப்பை தனதாக்க முயலுகிறது. வுடக்கு மகாணத்துடன் கொண்டுள்ள தொடர்புடன் மட்டுமல்லாது தென் இலங்கையுடனும் நெருக்கத்தை சாத்தியப்படுத்த முனைகிறது. சீனா தென்பூகோள நாடுகள் மத்தியில் உட்கட்டமைப்பு காலனியத்தை ((Infrastructure Colonialism) மேற்கொள்வது போன்று இலங்கையிலும் அத்தகைய நகர்வுகளை வெற்றிகரமாக்கியுள்ளது. இத்தகைய நிலையிலேயே இந்தியாவின் வர்த்தக தொடர்புகள் நெருக்கமடைய முனைகிறது. உட்கட்டமைப்பு காலனிம் Win-Win ஒத்துழைப்பை கட்டமைத்ததுடன் பழைய பட்டுப்பாதை வர்த்தகத்திற்கு நிகராக புதிய பட்டுபபாதை வர்த்தகத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் உலகளாவிய வர்த்தகத்தில் பங்கெடுக்கும் சீனா சந்தையையும் வர்தகத்தையும் ஒன்றிணைக்கும் உபாயத்தை வெற்றிகரமானதாக மாற்றியுள்ளது. உலகம் வெற்றி –தோல்விக் கோட்பாட்டை கொண்டியங்க சீனா வெற்றி-வெற்றிக் கோட்பாட்டை உலகத்தை வெற்றி கொள்ளும் உபாயமாக பிரயோகித்துக் கொண்டுவருகிறது. இதுவே இந்திய-சீன ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் இலங்கை பொறுத்த கொள்கையில் காணப்படும் ஏற்ற இறக்கமாகும்.
வர்த்தகமானது நாடுகளது உறவை பிணைப்பதுடன் பொருளாதார பிணைப்பு வலுவான அரசியல் கட்டமைப்புக்கு வழிவகுக்கும் உலகத்தை உருவாக்கியுள்ளது. இதனையே இந்தியா இலங்கைத் தீவின் பின்பற்ற முனைகிறது. அதனையே சந்தோஷ் ஜா வெளிப்படுத்தியுள்ளார். கொழும்பு –கொச்சி உறவுப்பரிமாற்றமானது இரு நாட்டுக்குமான பொருளாதார உறவை வலுப்படுத்துவதற்கு அப்பால் அரசியல் உறவை கட்டமைக்கும் கருவியாக திரவ எரிவாயுக் குழாய்திட்டம் அமையவிருப்பது தெரிகிறது. வடக்குடனும் தெற்குடனும் பொருளாதார உறவையே இந்தியா கட்டமைத்துவருகிறது. ஆனால் இந்தியாவிடம் தனது பாதுகாப்புக் கொள்கை பொறுத்து நெருக்கடி இலங்கைத் தீவால் உள்ளது என்பதை தூதுவர் ஜாவின் உரை உணர்த்துகிறது. இலங்கைத் தீவு பாதுகாப்புச் சார்ந்து ஆதரவையும் ஒத்துழைப்பையும் இந்தியா எதிர்பார்ப்பதாக வெளிப்படையாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார் என்பது இந்தியாவின நிலையை உணர்த்துகிறது. இதனை விரிவாக நோக்குவது அவசியமானது.
முதலாவது, இலங்கையின் சந்தையால் இந்தியாவின் பொருளாதாரத்தில் அதிக மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதல்ல என்பது தெரிந்தவிடயம். இலங்கையின் மக்கள் தொகை தமிழ் நாட்டைக்காட்டிலும் மிகச்சிறியது என்பது அதன் வலிமையை உணர்ந்து கொள்ள முடியும். ஆனாலும் நேரடி முதலீடுகளையும் வர்த்தக நடவடிக்கைகளையும் இந்தியா இலங்கையுடன் மேற்கொண்டுவருகிறது என்பது இந்தியாவின் பொருளாதார வாய்ப்புக்கானதல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் முதலீடுகளும் வர்த்தக நடவடிக்கைகளும் இலங்கையுடனான உறவை பேணுவதேயாகும். அதன் மூலம் இலங்கை அரசியலில் இந்தியாவின் செல்வாக்கினை வலுப்படுத்த முடியுமென இந்திய அரசாங்கம் கருதுகிறது.
இரண்டாவது, இந்தியாவின் நெருக்கமான பொருளாதார பிணைப்பு சீனா போன்ற நாடுகளது இலங்கையுடனான ஒத்துழைப்பினை தடுத்து நிறுத்துவதாகும். காரணம் சீனாவின் இலங்கைத் தீவுடனான உறவானது பொருளாதார அர்த்தத்திலேயே முதன்மையானது என இந்தியா கருதுகிறது. இலங்கைத் தீவுக்கு தேவையான பொருளாதார ஒத்துழைப்பினை வழங்கும் போது இலங்கை சீனாவுடனான உறவை கைவிடும் என இந்தியா கருதுகிறது. அல்லது கைவிட வைக்க முடியுமென்று இந்திய ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். அதற்கான வாய்ப்பு உள்ளதாகவே இந்திய தரப்பு ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் இராஜதந்திரிகளும் அத்தகைய கருத்தினையே அதிகம் பிரதிபலிக்கின்றார்கள். இலங்கை ஆட்சியாளர்களும் அதனை ஊக்குவிக்கும் விதத்தில் உரையாடுகின்றனர். இந்தியா பக்கம் இருப்பது போல் காட்டிக் கொள்ள முயலுகின்றனர். ஆனால் இலங்கை –சீன உறவென்பது அடிப்படையில் பொருளாதார ஒத்துழைப்புக்கான உறவு கிடையாது. பொருளாதாரம் என்பது அடம்ஸ்சிமித்தின் காலத்திலிருந்து அரசியல் பொரளாதாரமாக மாறிவிட்டது. பொருளாதாரமோ அரசியலோ தனித்தனியானதல்ல. இவை இரண்டும் ஒன்றிணைந்து செயல்படும் போது மட்டுமே இலக்கை அடையும் வாய்ப்பினை ஒரு நாடு பெற்றுக் கொள்கிறது. இதனையே சீனாவின் இலங்கையுடனான உறவிலும்அ பார்க்க முடிகிறது. இலங்கை ஆட்சியாளரைப் பொறுத்தவரை பொருளாதார வாய்ப்புக்களைக் காட்டிலும் அரசியலே முதன்மையானதாக கொள்கின்றன. சீனாவுடனான உறவினால் அயலிலுள்ள இந்தியாவின் இலங்;கை மீதான ஆதிக்கததை கட்டுப்படுத்த முடியுமென கருதும் போக்கு நிலவுகிறது. ஆல்லது இலங்கை மீதான அழுத்தங்களை தவிர்ப்பதுடன் இந்தியாவின் எல்லைமீறிய அல்லது ஆக்கிரமிப்புக்கான நகர்வுகள் அனைத்தையும் தடுத்து நிறுத்திவிட முடியுமென தென் இலங்கை கணித்துள்ளது.
மூன்றாவது, இலங்கை மீது இந்தியாவின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் அதே வேளை இந்தியா மீதும் அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடிய நாடு ஒன்றுடனான உறவை தென் இலங்கை முதன்மையாகக் கருதுகிறது. இந்தியா கருதுவது போல் அல்லாது சீனாவுடனான உறவை தென் இலங்கை அரசியல் உறவாகக் கருதுகிறது. பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தைவிட அரசியல் முக்கியத்துவம் அதிகம் கொண்டதாகவே தென் இலங்கை சீனாவுடனான உறவை பார்கிறது. அதனை அரசியல் பொருளாதார உறவாக கருதுவதைக் காட்டிலும் அரசியல் உறவாக அணுகுவது இலாபகரமானதாக தென் இலங்கை ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். சீனாவுடனான வர்த்தக உறவை இந்தியாவுக்கு நிகரானதாக தென் இலங்கை கொண்டிருந்தாலும் அதன் மூலம் அரசியல் பலத்தையே வெளிப்படுத்த விரும்புகிறது. ஏனெனில் இலங்கையின் இருப்பென்பது இந்தியா எதிர்பினால் ஏற்பட்டதாகும். அது தனித்து சீனா பக்கமானதல்ல. அது பாகிஸ்தான சார்ந்ததுமாகவும் உள்ளது.
எனவே இந்தியாவின் வர்த்தக அணுகுமுறையானது இலங்கைத் தீவு முழுவதையும் மையப்படுத்தியது. இலங்கை-இந்திய வர்த்தமானது இரு நாட்டு உறவை பலப்படுத்துவதுடன் இலங்கைத் தீவை செல்வாக்குச் செலுத்தவும் பிற வல்லரசுகள் ஊடுருவாது தடுத்து நிறுத்துவதற்குமான செய்முறையாகவும் தெரிகிறது. தென் இலங்கையையும் வடக்கையும் இந்தியா சமபங்காளியாக்கும் வாய்ப்பில் பொருளாதார வர்த்தக உறவை கட்டமைக்க முயலுகிறது. அதனையே இலங்கைக்கான இநதியத் தூதுவரது உரை உணர்த்துகிறது. ஆனால் தென் இலங்கையின் நடைமுறை யதார்த்தம் வேறு ஒரு தடத்தில் இயங்குகிறதைக் கண்டு கொள்ள முடியும். அது வரலாற்றுக் காலம் முதல் இருநாட்டுக்குமான உறவின் அடிப்படையில் நிலவும் யதார்த்தமாக அமைந்துள்ளது. அதனால் ஏற்பட்டுள்ள பாதுகாப்புச் சார்ந்த நெருக்கடியை இந்தியா எதிர்கொள்வதையும் தூதுவரது உரை வெளிப்படுத்துகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-