தலைகீழாக கட்டிவைத்து மாட்டுக்கு அடித்தது போல் அடித்த பொலிசார்

இன்னுமொரு அலெக்சாக என்னை வட்டுக்கோட்டை பொலிசார் கொன்றாலும் என்ற பயத்திலேயே அங்கிருந்து ஓடி வந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்தேன் என தெரிவித்த பாதிக்கப்பட்டவர், எனக்கு ஏதும் நடந்தால் வட்டுக்கோட்டை பொலிசாரே முழுமையான பொறுப்பினையும் ஏற்க வேண்டும் என கூறினார்.

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிசாரின் தாக்குதலுக்குள்ளான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கருணாகரன் நிதர்ஷன், தனது உயிரை காப்பாற்றுமாறு கோரி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை இன்று பதிவு செய்தார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

எனது கற்றல் நடவடிக்கைகளுக்காக இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்திற்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன்.

இந்நிலையில் சித்தன்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்றுவிட்டு மீள திரும்பி வந்த பொழுது வட்டு இந்து கல்லூரிக்கு அண்மையாக நின்ற பொலிசார் வழிமறித்தனர். வழிமறித்த பொலிசார் நாம் மறித்த பொழுது எதற்காக நிற்காது சென்றாய் என கேட்டனர்.

இந்நிலையில் போக்குவரத்து பொலிசார் இல்லை என்ற அடிப்படையில் அவசரமாக சென்றேன் என கூறினேன். இந்நிலையில் திடீரென அங்குவந்த சிவில் உடை தரித்த பொலிசார் வீதியில் வைத்து சரமாரியாக தாக்கினர்.

இதனை காணொலியும் எடுத்தேன். இந்நிலையில் தொலைபேசியினையும் பறித்து என்னை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள அறை ஒன்றுக்கு கொண்டு சென்றனர்.

அறையினுள் பொலிசார் காலை விரித்து தலைகீழாக தூக்கி அடித்தனர். அடித்து கொண்டு தொலைபேசியில் உள்ள காணொலியை அழிப்பதற்கு தொலைபேசி கடவுச்சொல்லை கேட்டனர்.

நான் மறுத்தேன் மறுத்த பொழுது தொடர்ச்சியாக தாக்குதல் நடாத்தினர். போக்குவரத்து விதிகளை மீறியிருந்தால் எனக்கு தண்டம் விதியுங்கள். இல்லை நீதிமன்றம் அனுப்புங்கள் என கூறியும் அடித்தனர்.

இதனையடுத்து எனக்கு சுவாசம் உள்ளெடுக்க பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக என்னை வெளியில் கொண்டு வந்து அமர்த்தினர். அமர்த்திய பொழுது வீதியில் என்னை அடித்த செய்தி கேட்டு தாயார் வருகை தந்தார்.

இந்நிலையில் வீதியில் தாக்கியபோது கடையில் இருந்த இருந்த சிசிடிவி காணொளியை அழிப்பதற்காக பொலிஸார் அனைவரும் சென்றுவிட்டனர். அடிக்கு பயந்து இருந்த நான் அலெக்ஸ்க்கு நடந்த சம்பவத்தை நினைத்து பயத்தில் ஓடி வந்து விட்டேன்.

தற்பொழுது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்கின்றேன். இன்னுமொரு அலெக்சாக என்னை வட்டுக்கோட்டை பொலிசார் கொன்றாலும் என்ற பயத்திலேயே ஓடி வந்தேன்.

எனக்கு ஏதும் நடந்தால் வட்டுக்கோட்டை பொலிசாரே முழுமையான பொறுப்பினையும் ஏற்க வேண்டும் என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews