புகையிரதக் கடைவையைக் கடப்பதில் மக்களே அவதானம்-ரமேஷ் அடிகளார்

புகையிரதக் கடைவையைக் கடப்பதில் மக்களே அவதானம்!

இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் அதிகரித்து வரும் மரணங்களில் அண்மைக் காலங்களில் அதிகளவான மரணங்கள் வீதி விபத்துக்களால் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. வீதி விபத்துக்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக பலதரப்பினருடனும் தொடர்பு கொண்டு மக்கள் மத்தியில் ஓர் வழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமலமரித்தியாகிகளின் சமாதானத்தற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தால் நாம் பல செயற்பாடுகளை முன்நகர்த்தி வருகின்றோம்.இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (2-2-2024) அன்று கிளிநொச்சி நகர்ப்பகுதியில் புகையிரத கடவையில் ஏற்பட்ட இன்னொரு அகோர விபத்துச் சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கையில் பலபகுதிகளிலும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள புகையிரத போக்குவரத்து சேவைகளால் மக்கள் பெருமளவிலான நன்மைளை அனுபவித்துவருகின்றமை யாவருமறிந்த உண்மையாகும். அதேவேளை காலத்துக்குக் காலம் புகையிரத கடவைகளில் இடம்பெறும் உயிரழப்புக்களையும் நாம் மறந்துவிட முடியாது.இதற்கான காரணங்களை நாம் அனைவரும் அறிந்துகொண்டு வேண்டிய பாதுகாப்புக்களை நாமே உருவாக்கிக்கொள்வது மிகவும் அவசியமாகும். குறிப்பாக இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள புகையிரத பாதைகள் அனைத்தும் பெருந்தெருக்கள் மற்றும் வீதிகளை பலவிடங்களில் ஊடறுத்துச் செல்கின்ற நிலையைக் காணமுடியும். அவ்வாறான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள புகையிரத கடவைகள் அனைத்தம் பாதுகாப்பான கடவைகள் என்று கூறிவிட முடியாது சில இடங்களிவ் குறிப்பாக மக்கள் செறிவாக பாவிக்கும் வீதிகளில் ஓரளவான பாதுகாப்பு வசதிகள் அமைக்கப்பட்ட போதிலும் பலவிடங்களில் பாதுகாப்பற்ற கடவைகள் காணப்படுகின்றமை விபத்துக்கான காரணங்களில் ஒன்றாகும்.புகையிரதம் வீதிகளை கடப்பதற்கு முன்னர் எழுப்பபடும் சமிக்கை ஒலி மற்றும் சமிக்கை விளக்குகள் பொருத்தப்படாமலோ அல்லது சேதமடைந்தோ காணப்படுவதை பலவிடங்களிலும் அவதானிக்க முடிகின்ற அதேவேளையில் சிலவிடங்களில் வீதித்தடைகளற்ற கடவைகளை காண்புது கவலையளிக்கிறது. புகையிரத கடவைகளில் காணப்படும் செப்பனிடப்படாத வீதிகளும் புகையரதப் பாதையோரங்களில் ஓங்கி வளர்ந்திருக்கும் பற்றைகளும் பாதுகாப்பற்ற தன்மைகளையே வெளிப்படுத்துகின்றன. இந்நிலையில் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த உரிய நிர்வாக அலகுகள் விழிப்போடு செயற்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.எவை எவ்வாறாக இருப்பினும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில் மக்களின் பங்களிப்பே அதிகம் தேவைப்படுகின்றது. இன்று விபத்துக்கள் குறிப்பாக புகையிரதக் கடவைகளில் ஏற்படும் விபத்துக்களுக்கான பிரதான காரணம் மக்களின் கவனமின்மையும், விவேககமற்ற அவசரத்தன்மையுமே ஆகும். புகையிரதக் கடவை மூடப்பட்டு, புகையிரதம் அண்மையில் வந்துகொண்டிருக்கும் நேரத்தில்கூட மக்களில் சிலர் வீதியை பலவந்தமாக கடந்து செல்கிறார்கள். இது மாபெரும் குற்றமும் தம்மைத் தாமே அழிக்க முற்படும் செயலுமாகும். இன்று வடமாகாண புகையிரதக் கடவைகளில் ஒரு சிறு மணித்துளிகள்கூட காத்திருக்க பொறுமையில்லாத மனிதர்களும், அபாயகரமான நேரத்திலும் வீதியில் வித்தை காட்ட நினைக்கும் சில இளைஞர்களின் தன்னிச்சையான போக்குகளும், தொலைபேசி உரையாடலுடன் எதையும் கவனியாது கடவையைக் கடந்து செல்லும் மக்களும், புகையிரத பாதைகளில் சிறுபிள்ளைகளையும் வைத்துக் கொண்டு கூட்டமாக இருந்து சல்லாபிக்கும் ஒருசிலரும், மதுபோதையில் புகையிரத பாதைகளில் தனியே நடந்து செல்பவர்களும் தங்களுக்கு தாங்களே அழிவைத் தேடிக்கொள்கிறார்கள்.

இத்தனை நாளும் அழிந்தது போதும் இனியும் அகோர மரணங்களும் அழிவுகளும் எமக்கு வேண்டாம். விழிப்புணர்வு கொண்ட மக்களாக எம்மையும் பாதுகாத்து எம் மக்களையும் பாதுகாப்போம். ஒருவருக்கொருவர் ஆதரவாக, ஆதாரமாக செயற்பட்டு மனித உயிர்காக்க அணிதிரள்வோம். விபத்துக்களைத் தவிர்த்து உயிர் காப்போம்.அருட்தந்தை யா. றமேஸ் அ.ம.தி
சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம்
வடமாகாணம்

Recommended For You

About the Author: Editor Elukainews