
புதுப்பிக்கத்தக்க வலுசக்த்தி பாவனை மூலம் இலங்கையில் உள்ள மருத்துவமனைகளின் மின்சார விநியோகத்தை ஸ்திரப்படுத்தும் திட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கத்தின் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பொது மருத்துவமனை, குருநாகல் போதனா மருத்துவமனை மற்றும் இரத்தினபுரி போதனா மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி கட்டமைப்புகளை நிறுவுதல் மூலம் மின்சார வசதிகளை வழங்குவதற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகம் ஊடாக 1230 மில்லியன் ஜப்பானிய யென் கருத்திட்ட உதவியாக (ஏறத்தாழ 2.8 பில்லியன் ரூபாய்கள்) வழங்குவதற்கு ஜப்பான் அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.
சுகாதார துறையில் புதுப்பிக்கத்தக்கப்படாத வலுசக்தி பாவனையைக் குறைத்தல், சுகாதார சேவைகள் பிரிவின் ஒட்டுமொத்த வினைத்திறனை அதிகரித்தல் மற்றும் பேண்தகு அபிவிருத்தியை மேம்படுத்துதல் இக்கருத்திட்டத்தின் நோக்கமாக அமைகின்றது.
அதற்கமைய, குறித்த கருத்திட்டங்களை அமுல்படுத்துதல் தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.