அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக வவுனியாவிலும் கிராமத்திற்கு 30 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அதன் ஒரு கட்டமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வைரவ புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன், வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலாதாசன் ஆகியோர் முன்னிலையில் கிராம அலுவலர் விஜயகுமார் தலைமையில் கிராம மட்ட அமைப்புக்களுடனான கலந்துரையாடல் கிராம அலுவலர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கிராம மட்ட அமைப்புக்கள் தமது கிராம அலுவலர் பிரிவின் தேவைப்பாடுகள் குறித்து விவரித்தனர். இதனை அவதானித்த மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்களை வாழ்வாதாரம், உட்கட்டுமானம், சுற்றாடல் அபிவிருத்தி, பொது அமைப்புக்கள் என்னும் அடிப்படையில் முன்னுரிமைப்படுத்துமாறு கோரியதுடன், அதற்கு தேவையான ஒதுக்கீடுகளையும் வழங்கியுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் இணைப்பாளர் டினேஸ், வவுனியா நகரசபை உறுப்பினர்களான சு.காண்டீபன், க.சுமந்திரன், நா.சோனாதிராஜா, மதத்தலைவர்கள், வைரவபுளியங்குளம் கிராமத்தில் கடமையாற்றும் அரச உத்தியேகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.