மின்னொழுக்கு காரணமாக தும்புத் தொழிற்சாலை எரிந்து நாசமாகியுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணாவில் பகுதியில் உள்ள தும்பு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் 35 லட்சத்துக்கு மேற்பட்ட பெறுமதியான நட்டம் ஏற்பட்டுள்ளது. தீ பரவியமையால் தும்பு மற்றும் மின் உபகரணங்கள் அனைத்தும் எரிந்துள்ளது.
கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு வாகனம் பளுதடைந்த நிலையில் இருந்தமையால் தண்ணீர் பவுசர் மற்றும் அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இருப்பினும் தமது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் நிற்கதியாக நிற்பதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டு தடவைகள் மின் இணைப்பு வயரில் சேதாரம் ஏற்பட்ட நிலையில் அதனை இரண்டு தடவைகள் மின்சார சபையினர் வந்து அறுந்த வயறை முடிந்தே சென்றனர்.
அப்பகுதியில் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாகவே தும்பு தொழிற்சாலை எரிந்து நாசமாகி உள்ளதாக தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.