மன்னார் மடு-கோயில் மோட்டை பகுதியில் உள்ள, மடு தேவாலயத்திற்கான 50 ஏக்கர் விவசாய காணியில், 5 ஏக்கர் காணியில், மடு தேவாலயம் சார்பாக விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஏனைய காணியில், 27 விவசாயிகள், குத்தகை அடிப்படையில், இவ்வளவு காலமும், மடு தேவாலயத்திற்கு குத்தகையை செலுத்தியே விவசாய நடவடிக்கை மேற்கொண்டு வந்துள்ளதாக, மன்னார் மறை மாவட்ட காணி பொறுப்பாளர் இ.அன்ரனி சோசை அடிகளார் தெரிவித்துள்ளார்.
மடு-கோயில் மோட்டை பகுதியில் உள்ள விவசாய காணி தொடர்பாக நீண்ட காலம் இடம்பெற்ற கருத்து முரண்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி பி.கிறிஸ்து நாயகம் அடிகளார், மடுத்திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட காணி பொறுப்பாளர் அருட்பணி இ.அன்ரனி சோசை அடிகளார், மடுத்திருத்தல முன்னைநாள் பரிபாலகர் பி.எமிலியானுஸ்பிள்ளை அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.