முன்னுதாரணமான அரச அதிபரின் மனப்பாங்கை அனைத்து உத்தியோகத்தர்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும் …..!
——- பிரிவுபசார நிகழ்வில் இணைப்பாளர் சுட்டிக் காட்டு .
சக ஊழியர்களையும் மதித்து சிறப்பான சேவைக்காக வழித் நடாத்தும் எமது அரச அதிபரின் முன்னுதாரணமான மனப்பாங்கை அனைத்து உத்தியோகத்தர்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ரட்ணம் அமீன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரின் பணி நிறைவுக்கான பிரிவுப சார நிகழ்வு இன்றைய தினம் (12) மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்றைய தினம் அரசாங்க அதிபரின் திருமண நாளாகவும் அமைந்தமை காரணமாக நிகழ்வு இரட்டிப்பு சிறப்பாக அமைந்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
எமக்கான ஒரு சிறந்த முன்னுதாரணமான பணிமுறைமைக்காக அரச அதிபர் எமக்கு எதனை விட்டுச் சென்றிருக்கிறார் என்பதை முதலில் ஊழியர்கள் புரிந்து கொள்ள வலியுறுத்தி உரையாற்றிய இணைப்பாளர் மேலும் தனது உரையில்;
ஒரு அரச ஊழியரின் பணி மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டுமாயின் அது முதலில் அவரால் விரும்பி செய்யப்படும் பணியாக அமைய வேண்டும் என்பதில் எமது அரச அதிபர் உறுதியுடன் இருப்பவர்.
அதற்காக உங்கள் ஆலோசனையையும் எடுத்து க்கொண்டு சக ஊழியர்களுடன் இணைந்த செயற்பாட்டுக்கான அவரது பணிமுறைமை எமக்கு சிறந்த ஒரு முன்னுதாரணமாகும்.
ஊழியர்களிடத்தில் வெறுமனே அதிகாரத் தொனியில் கட்டளையிடுதல், குற்றங்காணுதல், குறைகூறுதல் என்பதற்கப்பால் கூட்டான ஆலோசனை வழிகாட்டல் அதற்காக இணைந்து பயணித்தல் என்பன உங்கள்
பண்பாக எப்போதும் இருக்க வேண்டும் என்பதே அவரது எதிர் பார்ப்பாகும். .
உங்களுக்கான வழிநடத்தலில் அவரது ஆளுமை தலைமைத்துவப் பண்புகளை நீங்களும் எடுத்துக் கொண்டு சிறந்த அரசுப் பணியாளராக உங்களை மேம்படுத்திக் கொள்வதே அவருக்கு நீங்கள் செய்யும் சிறந்த கைமாற்றாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இன்றைய நிகழ்வில் மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.