
அரச பேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துணுக்காயிலிருந்து காரைநகர் நோக்கி பயணித்த அரச பேருந்து எதிரே பயணித்த இராணுவ ரக் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

விபத்துக்குள்ளான இராணுவ வாகனம் குடைசாய்ந்ததில் 4 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதுடன், பேருந்தில் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பேருந்தை செலுத்திய சாரதியும் காயங்களுடன் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் குறித்த சாரதி பொலிசாரால் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.