வருடமொன்றுக்கு 2 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டித்தரும் யுகதனவி நிலையத்தையே அரசாங்கம் அமெரிக்க நிறுவனத்து விற்பனை செய்ய முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதில்லை என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், மக்களை விஞ்ஞானத்திலிருந்து கற்பனை உலகுக்குக் கொண்டு சென்றுள்ளது. பொய்யான தரவுகளை பயன்படுத்தி செயற்கைத்தனமான உளவுத்துறையை வைத்தே நாட்டை கொண்டு செல்கிறது.
கொடுப்பதை வாங்கிக் கொண்டு இருப்பதை விற்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
கெரவலப்பிட்டிய யுகதனவி மின்நிலையத்தை அமெரிக்காவின் நிவ்போட்ரஸ் நிறுவனத்துக்கு 250 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்துவிட்டு அதனை சாதாரண விடயமாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.
விற்பனை என்ற சொல்லுக்கு முதலீடு என்ற பதத்தைப் பயன்படுத்துவதையே இந்த அரசாங்கம் புதிதாகக் கண்டுபிடித்துள்ளது.
கெரவலப்பிட்டிய யுகதனவி மின்நிலையமானது, நூற்றுக்கு நூறுசதவீதம் அரசாங்க நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
திறைசேரிக்கு வருடமொன்றுக்கு 2 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டித்தரும் யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளே, தற்போNது அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
குறிப்பாக ஹில்டன் ஹோட்டலை விற்பனை செய்வதென்றால் அரசாங்கத்துக்கு தற்போது ஏற்பட்டுள்ள நட்டம் காரணமாக அதனை விற்பனை செய்வதாகக் கூறலாம்.
அதேபோன்று மத்தளை விமான நிலையத்தை விற்பனை செய்வதென்றால் விமானங்கள் வராததன் காரணமாக அதனை விற்பனை செய்ததாகக் கூறலாம்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்தால் கப்பல்கள் வராததன் காரணமாக அதனை விற்பனை செய்ததாகக் கூறலாம்.
தாமரைத் தடகாத்தை விற்பனை செய்தால் ஒரு சதமேனும் இலாபம் வராததன் காரணமாக அதனை விற்பனை செய்ததாகக் கூறலாம்.
வருடமொன்றுக்கு 2 பில்லியன் ரூபாயை இலாபமாகப் பெற்றுக்கொடுக்கும் இந்த நிறுவனத்தை அரசாங்கம் விற்பனை செய்ய முயற்சிக்கிறது.
அரசாங்கத்திடம் டொலர் இல்லாததே இந்த நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.
எமது நாட்டுக்கு டொலர் வரும் வருமான வழிகள் நான்கு காணப்படுகின்றன.
முதலாவது வருமானமாக ஏற்றுமதி காணப்படுகின்றது.
நாட்டில் உற்பத்திகள் குறையும்போது எதிர்காலத்தில் விவசாயத்துறையினூடாகக் கிடைக்கும் வருமானம் குறையும்.
சாதாரணமாக 2,400 மில்லியன் டொலர் வருமானமானது விவசாயத்துறையினூடாகக் கிடைக்கின்றது. எனவே உற்பத்திகள் குறையும்போது இந்த வருமானமும் குறையும்.