கொழும்பில் உள்ள கந்தானை நகரில் கடந்த சில நாட்களாக, மரியாள் போன்று உடையணிந்து சுற்றித் திரிந்த காட்சிகள் அடங்கிய பல காணொளிகள் சமூகத்தில் அதிகம் பேசப்பட்டுவந்த நிலையில் குறித்த பெண் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அவர் ஒரு வெளிநாட்டுப் பெண் என சந்தேகிக்கப்படுவதுடன்மரியாளின் சாயலைச் சித்தரிப்பதாகவும் சிலர் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், அவர் யார் என்பதனை அறிவதற்காக மக்கள் சமூக வலைத்தளங்களில் தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இதனடிப்படையில், இந்த சம்பவம் தொடர்பில் கந்தானை காவல்துறையினரிடம் வினவிய போது,
அவர் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த பெண் என, விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் அவர் இந்த நாட்டிற்கு வந்து பௌத்த தியான முறைகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த பெண் கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் தற்போது பௌத்த தத்துவத்தை பயின்று வருவதாகவும், இதனிடையே கந்தானை பிரதேசத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு சென்ற போது எடுக்கப்பட்ட காட்சிகளே சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.