கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்த, பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பரீட்சை எழுதும்போது, முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உண்மையான பரீட்சார்த்திக்கு பதிலாக இன்னொருவர் ஆள்மாறாட்டத்தில் பரீட்சைக்கு தோற்றியமை, கையெழுத்து மாற்றம், விடைத்தாள் பரிமாற்றம், கையடக்கத்தொலைபேசி வைத்திருத்தல் உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, பரீட்சைகள் திணைக்களத்துக்கு இவ்வாறான முறைகேடுகள் தொடர்பாக 4,174 புகார்கள் கிடைத்துள்ளன.
இந்த முறைப்பாடுகளை ஆராய்ந்ததில், அவற்றில் 3,967 பேரினது பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட விண்ணப்பதாரர்கள் குறித்து தனி விசாரணைகள் நடத்தப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்தார்.
மேலும், மீள் திருத்துவதற்கான விண்ணப்பங்களை அழைப்பதற்கான திகதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும், அவர் கூறினார்.