மக்கள் மீள குடியேறியுள்ள வலி வடக்கு பிரதேசத்தின் குரும்பசிட்டி J/242, கட்டுவன் J/238, கட்டுவன் மேற்கு J/239, குப்பிளான் வடக்கு J/211, மயிலிட்டி தெற்கு J/240 கிராமங்களில் விமான நிலைய விஸ்தரிப்புக்கென காணி அளவீடுகள் இடம்பெறுவதாக மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அது தொடர்பில் எனது கவனத்துக்கும் கிடைக்கப்பெற்றது.
இதனையடுத்து இன்று(16.02.2024) இடம்பெறும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இவ்விடயத்தை உள்ளடக்க வேண்டும் என்றும், மக்களுக்கி தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கோரி மாவட்ட செயலாளருக்கு 12.02.2024 அன்று எழுத்துமூலம் கோரியிருந்தேன்.
இந்நிலையில், இன்று(16.02.2024) இடம்பெறும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில், காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடலின்போது இப்பிரச்சனையை நானும், கௌரவ M.A சுமந்திரன் அவர்களும் முன்வைத்திருந்தோம்.
விமான நிலைய விஸ்தரிப்புக்காக விமான நிலையத்துக்கு வடக்கே காணி பெற திட்டமிட்டுள்ள நிலையில், விமானநிலையத்துக்கு தெற்கே மக்களது வாழ்விடங்களில் அளவீடு செய்ய வேண்டியதன் அவசியம் ஏன் என கேள்வி எழுப்பியிருந்தோம்.
இதற்கு, குறித்த அளவீடுகள் காணி சுவீகரிப்புக்காக மேற்கொள்ளப்படவில்லை என்றும், மதிப்பீட்டு அறிக்கைக்காக மேற்கொள்ளப்படுவதாகவும், இது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளின் பொறுப்பு என்றும் மாவட்ட செயலரால் கூட்டத்தில் பதில் தரப்பட்டது.
மேலும் எக்காரணத்தைக்கொண்டும் விமான நிலையத்துக்கு தெற்கே மக்கள் மீள குடியேறியுள்ள காணிகளை விமான நிலையத்துக்காக சுவீகரிப்பதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.
-அங்கஜன் இராமநாதன்