முல்லைத்தீவு சிலாவத்தை தெற்கு தியோகு நகர் பகுதி மீனவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி குரல் எழுப்பி அனைத்து தரப்பினரிடமும் உதவி கோரியுள்ளனர்.
நீண்டகாலமாக மீன்பிடித் தொழிலை தமது வாழ்வாதாரமாக கொண்டு வாழும் மக்கள் தற்போது தாங்கள் இயல்பாக தொழில் செய்ய முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
இதற்கு சரியான தீர்வை பெற்றுத் தரும்படி சம்மந்தப்பட்ட நிறுவனங்களில் புகார் செய்தும் தமக்கு நிரந்தரமான தீர்வு இதுவரை கிடைக்காத நிலையில் தத்தளிக்கின்றனர்.
நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்திற்க்காக ஏங்கும் நிலையில் அவர்களுக்கான தீர்வுகள் எட்டப்படாதது ஏன்?. மக்கள் தங்கள் பிரச்சினைகளை உரிய தரப்பினர்களிடம் அமைதியான முறையில் எடுத்து கூறியும் தங்கள் வேண்டுகோளுக்கு எவரும் செவிசயாய்க்கவில்லை என கண்ணீர்விட்டு குரலெழுப்புவது மிகவும் கவலையளிக்கிறது என்று அமலமரித்தியாகிகளின் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்மான பணியத்தின் இயக்குனர் அருட்தந்தை றமேஸ் அ.ம.தி அடிகளார் தெரிவித்துள்ளார்.
நீண்ட கால யுத்தத்தினாலும், சுனாமிப் பேரலையினாலும் தாக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்து, தமக்குரிய அனைத்தையும் இழந்து இன்று தமது வாழ்வைக் காத்துக் கொள்ள ஏங்கும் மக்களுக்கு நாம் அனைவரும் நீதியை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.
சம்மந்தப்பட்ட பிரச்சினையில் ஒவ்வொரு தரப்பினரிடமும் நியாயங்கள் இருக்கலாம் அவை மதிக்கப்பட வேண்டும். ஆனால் பொறுப்பதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இப்பிரச்சனையில் நியாயமான முறையில் தலையிட்டு அமைதி வழியில் ஓர் இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்விற்கு ஆவன செய்யுமாறு அவர் அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.