13 வயதில் துணிச்சலுடன் சாதிக்கப் புறப்பட்டிருக்கும் தன்வந்த்தை எனது அலுவலகத்தில் சந்தித்த போது எனது வாழ்த்துச் செய்தியையும் வழங்கி வாழ்த்தியனுப்பினேன்.
இலங்கை – இந்திய தேசங்களுக்கிடையிலான பிணைப்பை பலப்படுத்தும் பாக்கு நீரிணையை நீந்திக்கடக்கும் சாதனையை நிலைநாட்டும் பயணத்தை ஆரம்பித்துள்ள திருகோணமலையைச் சேர்ந்த செல்வன் ஹரிகரன் தன்வந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
13 வயதில் இந்தச்சாதனையை நிலைநாட்ட எடுத்துள்ள இவரது முதலடியானது, எதிர்கால சிறுவர்களுக்கு பெரும் நம்பிக்கையை விதைக்கும்.
இந்தியாவின் தனுஸ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரைக்குமான 32 கிலோமீற்றர் தூரத்தினை நீந்திக் கடக்கும் சாதனை பயணத்தை தன்வந்த், எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி அதிகாலை 12.05 மணிக்கு இந்தியாவின் தனுஸ்கோடியிலிருந்து ஆரம்பிக்கின்றார்.
இந்தப்பயணத்தின் ஊடாக இருநாடுகளினதும் சிறுவர்கள் இளைஞர்கள் மத்தியில் நல்லுறவும் நட்புறவும் வலுப்பெற ஓர் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
இடைவிடா பயிற்சியும், முயற்சியும் சிறுவயதிலிருந்து கொண்டிருக்கும் தன்வந்த் போன்றவர்கள் இத்தேசத்தின் பெருமையை நிலைநாட்டும் எதிர்கால நம்பிக்கைகள். அவர்களை ஊக்கப்படுத்துவது நமது கடமையாகும்.
திருமலை மண்ணின் மைந்தன் ஹரிகரன் தன்வந்த் அவர்களின் சாதனைப்பயணம் சிறப்பாக அமைய எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.