
இலங்கையில் அமுலில் இருந்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கோவிட் தொற்று வேகமாக பரவத் தொடங்கியதும், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், சுமார் 43 நாட்களின் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டதும். பொது மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய புதிய வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, அத்தியாவசியமற்ற எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து தொழிலுக்காக, மருத்துவ தேவைகளுக்காக மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் நாடளாவிய ரீதியில் தொடருந்துகளும் இயங்காது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவித்துள்ளார்.
அந்த வகையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் பேருந்துகள் நாளை முதல் அடுத்த 14 நாட்களுக்கு ஒவ்வொரு மாகாணத்துக்குள் மாத்திரம் இயங்கும் எனவும் மாகாணங்களுக்கு இடையில் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.