06ம் தரத்திற்கு மேலான மாணவர்களுக்கு பாடசாலையில் கற்கக்கூடிய பாடங்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் 07 பாடங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
வராப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (24) நடைபெற்ற வைபவம் ஒன்றில் வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், மாணவர்கள் வாழும் அந்தந்த மாகாணங்களுக்கு ஏற்ப பூர்வீக கைத்தொழிகளை இணைத்து எஞ்சிய 03 பாடங்களையும் கற்கும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாடசாலைகளுக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் தகவல் தொழில்நுட்ப அறிவை பெற்றிருக்க வேண்டும் என்றும், அனைத்து வலயத்திலும் அமைக்கப்பட்டுள்ள கணினி வள மையங்கள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பாரிய வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஆசிரியர்களுக்கு கணினிப் பயிற்சி வழங்கும் அதேவேளை, மென்பொருள் உருவாக்கம் மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக பிராந்திய மட்டத்தில் குழுவொன்றைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு ஆங்கில மொழி வழிகாட்டல் மற்றும் தொழில்சார் பாடத்தை இலவசமாகக் கற்கும் வாய்ப்பை மார்ச் 5ஆம் திகதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 300 நிலையங்களைப் பயன்படுத்தி இந்தப் பயிற்சித் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கும் இது போன்ற பயிற்சித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இது குறித்து, பாடசாலை அதிபரின் ஆலோசனையினை பெற்று திறன் மேம்பாட்டு அலுவலர்களின் வழிகாட்டுதலின் கீழ், பாடசாலை நேரத்துக்குப் பின், அருகில் உள்ள மத்திய நிலையங்களுக்கு சென்று இரண்டரை மணி நேரம் நடக்கும் பயிற்சியில் சேரலாம் எனவும், கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.