
இராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெற்ற நிலையில் பத்து நாட்களுக்கு பின், மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 10 நாட்களாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் குறித்த வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்ற இராமேஸ்வரம் மீனவர்கள், மீண்டும் கடற்றொழில் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
இதனால் 10 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட மீன்பிடி துறைமுகம் இன்று மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை மீனவர்களின் உண்ணாவிரத போராட்ட பகுதிக்கு வருகை தந்த இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததுடன், விரைவில் தமிழக முதல்வரை மீனவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் மீனவர்கள் தங்களது உண்ணாவிரத போராட்டம் மற்றும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
இதனையடுத்து இன்று வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று ராமேஸ்வரம் மீனவர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்று கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.