அரச உத்தியோகத்தர்களின் 49% தொலைபேசி எண்கள், அதாவது அரைவாசி எண்கள் செயல்படாத எண்கள் என கணக்கெடுப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதையும் உள்ளடக்கிய இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரதேச செயலகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களைக் கருத்தில் கொண்டு இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கணக்கெடுக்கப்பட்ட 589 தொலைபேசி எண்களில் 286, அதாவது 49% செயலற்ற எண்கள் என்று தெரியவந்துள்ளது.
தொலைபேசி எண்களில் 22% செயலில் உள்ளது ஆனால் பதிலளிக்கவில்லை. ஆய்வுத் துறையின் கூற்றுப்படி, அழைப்புகளுக்கு பதிலளிக்கும் சதவீதம் 29% ஆகும்.
மேலும், 98 உள்ளூராட்சி மன்றங்கள், 23 மாநகர சபைகள் மற்றும் 36 நகர சபைகளின் தொலைபேசி இலக்கங்கள் இந்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரக் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல, அரச சேவையில் தற்போதுள்ள வினைத்திறன் இன்மை குறித்து கணக்கெடுப்பின் முடிவுகள் மூலம் புரிந்து கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.