மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து வரும் இலங்கை அரசையும், சிறை தண்டனையை தட்டி கேட்காத மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் ஒன்று தமிழகத்தில் இன்று இடம்பெற்றதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழக கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையானது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு முன் வைத்து தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருவது மட்டுமல்லாது இரண்டாவது முறையாக எல்லை தாண்டும் மீனவர்களுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் படகோட்டிகளுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து வருகின்றது.
இந்நிலையில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் இலங்கை அரசையும், அதனை தடுக்காத மத்திய அரசையும் கண்டித்து பாம்பன் தெற்கு வாடி கடற்கரை பகுதியில் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் பல்வேறு மாவட்டத்திலிருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு இலங்கை அரசுக்கு எதிராகவும்,மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பியுள்ளனர்.