ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் குற்றவியல் நடவடிக்கை உள்ளாக்கப்பட வேண்டியவராக குற்றம் சாட்டப்பட்டுள்ள தேரரை அரச ஊடகம் எவ்வாறு அழைத்து இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லிம்களுக்கு எதிராக பேச வைத்தது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.என்.முபீன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் மேலும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரான யூ.எல்.எம்.என் முபீன் தங்களுக்கு எழுதும் இரண்டாவது பகிரங்க மடல். கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி காலை எட்டு மணிக்கு இலங்கை ரூபவாஹினி அலைவரிசையில் இடம்பெற்ற “ஆயுபோவன்” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலகொட அத்தே ஞானசார தேரர் இலங்கை முஸ்லிம் மக்கள் மீது சிங்கள மக்கள் சந்தேகம் மற்றும் வெறுப்பு கொள்ளத்தக்க வகையில் இனவாதத்தை தூண்டும் விஷமக் கருத்துக்களை முன்வைத்தார்.
இந்த நிகழ்ச்சியை நெறிப்படுத்திய நெறியாளர் இத்தகைய இனவாதக் கருத்துக்களை தேரர் தங்குதடையின்றி முன்வைத்த போது அதற்கு விமர்சன ரீதியாக எத்தகைய எதிர் வினாவையும் எழுப்பி விமர்சன ரீதியிலான விளக்கத்தை பெற முயற்சிக்காமல் ஞானசார தேரரின் வெறுப்புக் கருத்துகள் மூலம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள அப்பாவி மக்கள் விரோதம் கொள்வதற்கு ஏற்றவகையில் தாராளமாக இடம் வழங்கினார். முஸ்லிம் மக்களை நடமாடும் குண்டுதாரிகளாக காண்பிக்க தேரரின் விஷமக் கருத்துகள் முயன்றமைக்கு இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் எப்படி அனுமதி அளித்தது? அரச பிரதான ஊடக அலைவரிசை என்ற வகையில் இது திட்டமிட்ட செயற்பாட்டுச் சதியா? ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் குற்றவியல் நடவடிக்கை உள்ளாக்கப்பட வேண்டியவராக குற்றம் சாட்டப்பட்டுள்ள தேரரை அரச ஊடகம் எவ்வாறு அழைத்து இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லிம்களுக்கு எதிராக பேச வைத்தது? முஸ்லிம் மக்கள் இந்த நிகழ்ச்சியால் மிகவும் மனம் புண்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் இலங்கை சட்டவாக்க சபையில் உயர் உறுப்புறுமையை கொண்டுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக அரசாங்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தற்போது அரச ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள இருபதாம் திருத்தத்திற்கு ஆதரவு அளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் ஜனாதிபதி, பிரதம மந்திரி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஞானசார தேரருக்கும் இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்திற்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் இத்தகைய நிகழ்ச்சிகள் எதிர்காலத்தில் இடம் பெறக்கூடாது என்ற எழுத்து மூல உத்தரவாதத்தை பெற்றுக் கொள்ளுமாறும் தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ் விடயம் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானிற்கு நன்றியை தெரிவிக்கின்றேன். உடன் தங்களின் விரைவான நடவடிக்கை எதிர்பார்த்தவனாக என குறிப்பிடப்பட்டுள்ளது.