இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக பீற்றர் இளஞ்செழியனால் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதையடுத்து எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியமாநாடு கடந்த 19 ஆம் திகதி நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தநிலையில், அதற்குத் தடை விதிக்கக்கோரி யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் இருவேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவில் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் தொடர்ச்சியாகவே இந்தமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான பீற்றர் இளஞ்செழியன் யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில்,
தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப் பினர் சி.சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவர் ச. குகதாசன் மற்றும் குலநாயகம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான யோகேஸ்வரன் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
திருகோணமலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளை உறுப்பினர் சந்திரசேகரம் பரா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.