எங்களது போராட்டம் வாழ்வாதாரத்துக்கான போராட்டம். ஒரே நிறுவனத்தின் பணியாற்றும் ஒரு தரப்பினருக்கு சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு, எங்களுக்கு வாக்குறுதி தந்து அரசு ஏமாற்றி வருகின்றது. இவ்வாறான நிலை நீடிக்குமாக இருந்தால் நாங்கள் தொடர் போராட்டம் ஒன்றுக்கு செல்வதைத்தவிர வேறு வழியில்லை என்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் சம்மேளனம், முன்னெடுத்துள்ள தொடர்ச்சியான இரு நாட்கள் கொண்ட அடையாள வேலை நிறுத்தத்தின் இரண்டாம் நாளான இன்று(29) தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் தங்களது போராட்டத்தை சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் நுழைவாயிலில் முன்னெடுத்தனர்.
கல்விசார ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தலைமையில் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம். முகமது காமிலின் வழிகாட்டலில் இடம்பெற்ற குறித்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தின் இரண்டாம் நாளிலும் பெருமளவிலான ஊழியர்கள் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தின் காரணமாக இன்று இடம்பெறவிருந்த 12 ஆவது சர்வதேச ஆய்வரங்கு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்றும் இடம்பெற்ற இப்போராட்டத்தில் வாக்களிக்கப்பட்ட 107% சம்பள அதிகரிப்பை வழங்கு, உறுதியளித்த 25% MCA கொடுப்பனவை வழங்கு என்பனபோன்ற பல்வேறு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வை தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இங்கு; ஒற்றுமையே பலம், சமத்துவமே எம் தேவை, அரசாங்கமே கண்முளித்துப்பார், 8 வருட ஏமாற்றம் இன்னும் தொடருமா?, வேண்டாம் வேண்டாம் பாகுபாடு வேண்டாம், புத்திஜீவிகளை உருவாக்கும் அரச ஊழியர்களாகிய நாங்கள் நடுத்தெருவில்” போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.