இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என, வடபகுதி மீனவர்கள், கடற்படையினர் மீது தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டுகின்ற நிலையில், உள்ளூர் தமிழ் மீனவர்களின் தொழிலுக்கு இடையூறு விளைவிப்பதாக கடற்படை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
யாழ்ப்பாணம் – மாதகல் சம்பில்துறை (ஜம்புகோள பட்டினம்) விகாரைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்படையினர் தடை விதித்துள்ளதாக அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவிப்பதாக யாழ்ப்பாண மாவட்ட ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு தடைகளை ஏற்படுத்த கடற்படைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவிக்கின்றார்.
“என்ன அதிகாரம் இருக்கிறது? எங்கள் வாழ்வாதாரத்தை சிதைத்துத்தான் நீங்கள் விகாரைகளில் வழிபாடு நடத்தவேண்டுமா? உங்கள் அதிகாரத் திமிர்த்தனங்களை எங்கள் மக்கள் எப்போதும் அமைதியுடன் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என் நினைக்காதீர்கள்.” என யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் எம்.பி கடற்படையை எச்சரித்துள்ளார்.
சம்பில்துறை பகுதியில் அமைந்துள்ள சங்கமித்த விகாரையின் பின்புறமாக உள்ள கடற்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட வேண்டாம் என கடந்த 2013ஆம் ஆண்டு கடற்தொழிலாளர்களுக்கு கடற்படையினரால் தடை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கும் யாழ்ப்பாணம் மாவட்ட ஊடவியலாளர்கள், பின்னர் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலையீட்டுன் அந்தத் தடை நீக்கப்பட்டதாக குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில் தற்போது அப்பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரி , விகாரையின் பின்புறத்தோடு இணைந்த கடல் பிரதேசத்தில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவித்துள்ளதாக ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
குறித்த விகாரை அமைந்துள்ள பிரதேசத்தில் பொது மக்களின் காணிகளை அபகரித்துள்ள விடுதிகளை அமைத்துள்ள கடற்படை, கடலையும் ஆக்கிரமித்து விடுதிகளை அமைக்கப்போகிறதா என முன்னாள் எம்.பி சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
“விகாரைக்கு அண்மையாக, எங்கள் மக்களின் காணிகளை அத்துமீறி பிடித்த கடற்படையினர் விடுதியை அமைத்து சிங்களவர்களைத்் தங்க வைக்கின்றனர். இப்போது எங்கள் கடலையும் கையகப்படுத்தி அதிலும் விடுதி அமைக்கப்போகின்றார்களா என்ற நியாயமான சந்தேகம் எழத்தான் செய்கின்றது.”
தேசிய பாதுகாப்புக் கருதி, சட்டத்திற்கு உட்பட சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு கடற்படையினருக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், எனினும் மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு கடற்படைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், மாதகல் சம்பில்துறை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்படையினர் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படும் விடயம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
“கடற்படை அவர்கள் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் பேச முடியு. மதம் சார்ந்து பேசுவதற்கு எந்த அனுமதியும் இல்லை அவர்கள். கடற்படை அவர்கள், தங்களுடைய தேசிய பாதுகாப்புத் தொடர்பிலான அவர்களுடைய கருத்துக்களைச் சொல்லலாமேத் தவிர, அதுவும் சட்ட ரீதியாக, அவர்களுடன் அனுகுகின்ற தரப்பின் ஊடாகத்தான் இதனை தெரிவிக்க முடியுமேத் தவிர, நேரடியாக அந்த கடற்றொழிலில் ஈடுபட்டவர்களுக்கு தெரிவிக்கமுடியாது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு கடற்பைடை ஒரு போதும் இடையூறு ஏற்படுத்துவதில்லை என, கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாணம் – மாதகல் பிரதேசத்தில் இறால் பிடியில் ஈடுபட்ட சிலருக்கு முறையான அனுமதிப்பத்திரம் காணப்படவில்லை எனவும், ஆகவே அவர்களின் தொழில் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவிக்கின்றார்.