வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் சிவராத்திரி தினத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வழிபாட்டை குழப்புவதற்கு பௌத்த பீடம் ஒன்றின் பிக்குமார்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தவபாலன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
எதிர்வரும் 8ஆம் திகதி மகா சிவராத்திரி வழிபாட்டில் சைவ மக்கள் ஈடுபடவுள்ள நிலையில், வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திலும் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
அதனை தடுத்து நிறுத்தும் முகமாக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பௌத்த பீடம் ஒன்றின் பிக்குமார்கள் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தவபாலன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெடுக்கு நாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி மகா சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபடுவதை தடுக்கும் முகமாக பௌத்த பீடம் ஒன்றின் பிக்குமார்கள் இணைந்து முகநூலில் பதிவுகளை செய்து வருகின்றனர்.
இவை இனங்களுக்கிடையிலான மத நல்லிணக்கத்தினை சிதைக்கும் நடவடிக்கை தமிழர்களின் நில ஆக்கிரமிப்புக்களில் குருந்தூர் மலையாக இருக்கலாம் ,வெடுக்குநாறி மலையாக இருக்கலாம் எந்த விடயங்களாக இருந்தாலும் தமிழர் தேசத்தில் நாங்கள் போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
சிங்கள பௌத்த மனநிலை உள்ள தலைவர்கள் தமிழர்களின் தீர்வினை தாம்பாளத்தில் வைத்து தரமாட்டார்கள் என்று எங்கள் தலைவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
அதை காலம் உணர்த்திக்கொண்டிருக்கின்றது. எவராக இருந்தாலும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை தருகின்ற மனநிலையில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.