காந்தி தேசத்தின் அநீதியால் பலியான சாந்தன் அவர்களுக்கு எமது இறுதி வணக்கங்கள்  

பல்லாண்டு காலமாக பிரிந்திருந்த தாயக மண்ணில் காலடி பதிக்க ஆவலுடன் காத்திருந்த சாந்தன் அவர்களின் திடீர் மரணச்செய்தி கேட்டு ஆறாத்துயரும் மனவேதனையும் அடைந்தோம். பல வருட காத்திருப்பின் மகனை காண ஆவலாக காத்திருந்த தாயாரின் ஆற்ற முடியா துயரத்திலும், உறவுகளின் வேதனையிலும் நாமும் பங்கு கொள்கிறோம்.
சாந்தன் அவர்கள் அநீதியான நீதி பொறிமுறையால் மரண தண்டனை விதிக்கப்பட்டு 33 வருடங்கள் தொடர்ச்சியாக சிறை கொடுமையை அனுபவித்த பின், உச்ச நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட பின்னரும் கூட ஒரு ஆண்டுக்கு மேலாக சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டமை கொடுமையின் உச்சம். இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே அவமதிக்கும் செயலாகும். இந்திய வல்லாதிக்கத்தினால் ஈழத்தமிழர் மீது தொடர்ந்தும் நடாத்தப்படும் இவ்வன்செயலைக் கண்டிப்பதுடன், இந்த “சிறப்பு முகாம்கள்” மூடப்பட்டு தொடர்ந்தும் அரசியல் கைதிகளாக இருக்கும் ஈழத்தமிழர்கள் சுதந்திரத்தினை அனுபவிக்க வழி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம். குறிப்பாக இதே வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட போதும் தொடர்ந்தும் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் அவர்களின் உறவுகளுடன் சேர்ந்து தமது மிகுதி வாழ்நாளை கழிக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாயக கனவுடன் மீளா துயில் கொண்ட சாந்தன் அவர்களுக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தனது இறுதி வணக்கங்களை செலுத்துவதுடன் இன்று நடைபெறவுள்ள அன்னாரின் இறுதி பயணத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு எமது தேசத்தின் உணர்வு நிலையை வெளிப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
எமது தேசத்தின் விடுதலைக்காய் தொடர்ந்தும் போராடுவோம் என உறுதி எடுத்து கொள்கிறோம்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம்

Recommended For You

About the Author: Editor Elukainews