
இந்திய இழுவைமடிப் படகுகளால் யாழில் கடற்றொழிலாளர்களின் வலைகள் அறுத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கை கடற்பரப்புக்குள் நேற்று முன்தினம்(02) இரவு வேளை அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைமடி படகுகளால் யாழ் வலிகாமம் மேற்கு, சுழிபுரம் சவுக்கடி கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு மீனவர்களின் வலைகள் அறுத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்திய இழுவைமடி படகுகளால் அறுத்து சேதமாக்கப்பட்ட வலைகளை மீட்க முற்பட்ட வேளை இரண்டு மீனவர்களின் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக ஒரு இலட்சத்து இருபத்து ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான தலா இரண்டு வலைகள் இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதாகவும் குறித்த சம்பவத்தோடு நான்கு முறைப்பாட்டு படிவங்களுக்கு மேலாக தங்களிடம் இழுவைமடி படகுகளால் ஏற்பட்ட சேதங்களிற்கான முறைப்பாட்டு படிவங்கள் இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
முறைப்பாடுகள் அழிக்கப்படுகின்ற பொழுதிலும் தமக்கான வாழ்வாதாரம் தொடர்ந்து அழிக்கப்பட்டு கொண்டிருப்பதாகவும் இந்திய இழுவைமடி படகுகளை கடற்டையினர் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.