தற்போது நிலவும் அதிக வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு நேராக, 90° கோணத்தில் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அத்தோடு எல்நினோ வின் தாக்கம் எதிர்வரும் ஜுன் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வடக்கு மாகாணத்தின் ஆவியாக்க அளவு சராசரியை விட 19 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இதன் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மேற்பரப்பு நீர்நிலைகளின் அளவு சடுதியாக குறைவடையும் வாய்ப்புள்ளது.
மழைவீழ்ச்சியைப் பொறுத்தவரை எதிர்வரும் மார்ச் மாதத்தின் இறுதியிலும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்திலும் அயன இடை ஒருங்கல் வலயத்தின் விரிவு காரணமாக சற்று கனமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஆயினும் தற்போது இதனை உறுதியாக எதிர்வுகூற முடியாது.
எனவே சிறுபோக நெற்செய்கைப் பரப்பின் அளவைக் குளங்களின் தற்போதுள்ள நீரின் அளவைக் கருத்தில் கொண்டு தீர்மானிப்பது உசிதமல்ல. பிரதான குளங்களின் கீழான சிறுபோக நெற்செய்கைப் பரப்பைத் தீர்மானிக்கும் போது நீர் முகாமையாளர்கள் தொடரும் அதிக வெப்பநிலை, எல்நினோவின் தீவிரத்தன்மை, அதிகரிக்கும் ஆவியாக்கத்தின் அளவு போன்றவற்றை கருத்தில் கொண்டு தீர்மானிப்பது சிறந்தது.
– நாகமுத்து பிரதீபராஜா-