தமிழர்களின் பூர்வீக ஆலயங்களை சிங்கள பௌத்தின் பெயரால் ஆக்கிரமிக்க இலங்கையின் முக்கிய பௌத்த கட்டமைப்புகள் முயற்சித்து வரும் நிலையில், வெடுக்குநாறி மலையில் உள்ள சிவாலயத்தில் இன்று இடம்பெறவுள்ள சிவராத்திரி பூசைகளை தடுக்க அடாவடியாக நகர்வுகள் எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான நகர்வுகளின் அடிப்படையில் நேற்று மாலை, பூசைகளுக்குரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளச் சென்ற பூசகர் உட்பட்ட இருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நெடுங்கேனி காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .
இது தொடர்பில் மேலும் தெரிக்கப்படுவதாவது
வெடுக்குநாறிமலை ஆலயத்தின் சிவராத்திரி நிகழ்வுகளை தடுக்கும் வகையில் ஒரு தடை உத்தரவை பிறப்பிக்குமாறு சிறிலங்கா காவற்துறை தலைமையகத்துக்கு நேற்று பௌத்த தகவல் மையத்தால் அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எந்தவொரு தடையும் ஏற்படாதிருப்பதை உறுதி செய்வதற்காக, ஆலயத்தின் நிர்வாகத்தினர் வவுனியா நீதிமன்றில் நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இதற்கமைய ஆலயத்தில் முன்னெடுக்கப்படும் வழிபாடுகளுக்கு எந்தவொரு தடையும் ஏற்படுத்தப்படக்கூடாதென நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய வெடுக்குநாறிமலை ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகளுக்காக முன்னெடுக்கப்பட்ட முன் ஆயத்த பணிகளுக்கு காவல்துறையினரால் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, பூசகர் உட்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், தடைகளை மீறி வெடுக்குநாறிமலை ஆலயத்தில் இன்றைய தினம் சிவராத்திரி வழிபாடுகள் நடத்தப்படுமென ஆலயத்தின் நிர்வாக குழு தெரிவித்துள்ளது.