
தனது தாயாருக்கு கொலைமிரட்டல் விடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை வடக்கு, அலமோதர பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
59 வயதுடைய தாயார் கடந்த மார்ச் மாதம் 4ஆம் திகதி இரவு சந்தேகநபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் சுகயீனம் காரணமாக ஹொரண மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் உயிரிழந்துள்ளதுடன், குறித்த பெண்ணின் மூத்த மகன் சம்பவத்தின் போது வீட்டில் இருந்துள்ளார்.
ஆனால், மனநலம் பாதிக்கப்பட்டதால், அதற்கான மருந்தை அருந்தி தூங்கச் சென்றுள்ளார்.
மகள் பக்கத்து வீட்டில் படிக்கச் சென்றிருந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் சில காலத்திற்கு முன்னர் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்ததாகவும், சம்பவம் தொடர்பில் தனக்கு எதுவும் ஞாபகம் இல்லை எனவும் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.