வவுனியா நெடுங்கேணிப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்றைய தினம் நடைபெற உள்ள மகாசிவராத்திரியை கொண்டாடுவதற்கு நேற்று அனைத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து பொருட்களும் பொலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஆலயப் பூசகர் மதியகராசா அவரது சட்டை கொலரில் இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் நேற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வவுனியா நெடுங்கேணிப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று இடம்பெறவுள்ள மகாசிவராத்திரி தினம் கொண்டாடப்படவிருந்த நிலையில், அதற்குரிய ஒழுங்குகள் அனைத்தும் நேற்று அதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. இதே வேளை சிவராத்திரிக்கு தேவையான பூசைக்குரிய தோரணங்கள், வாழைமரங்கள், தண்ணீர் பொளசர் உட்பட அணைத்துப் பொருட்களும் பொலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஆலயப் பூசகர் மதியகராசா அவரது சட்டை கொலரில் இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அத்துடன் ஆலயப் போசகர் கலைச்செல்வன் அடித்து இழுத்து செல்லப்பட்டு நெடுங்கேணிப் பொலிசாரால் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் தப்பியோட முயற்சித்ததால் சுட்டு பிடிக்குமாறு கடும் தொனியில் நெடுங்கேணி உயர் பொலீஸ் அதிகாரி ஏனைய பொலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழர்களுக்கு தாயகத்தில் வழிபாட்டு, சமய உரிமை உட்பட எந்த உரிமையும் தடை செய்ப்பட்டுள்ளமை மீண்டும் மீண்டும் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. சிவராத்திரிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சமய பாரம்பரியங்கள் ஒரு இனத்தின் அடையாளத்தின் கூறுகளில் ஒன்றாகும். மகாசிவராத்திரியை தடுப்பது, தொடரும் கட்டமைப்பு படுகொலையினதும், கலாச்சார படுகொலையினதும் ஒரு அங்கமே ஆகும்.
தொடரும் மனித உரிமை மீறலை ஐ. நா மனித உரிமை ஆணையாளரும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ. நா மனித உரிமை பேரவையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோருகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். மகாசிவராத்திரி வழிபாடு நடாத்தப்பட வேண்டும். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.