இந்திய-ஈழத்தமிழர் உறவு அதிகம் கசப்பானதாகவே நோக்கப்படுகிறது. ரஜீவ்காந்தியின் படுகொலையை அடுத்து அதற்கான அடிப்படையை இந்தியப் பரப்பில் அதிகம் முதன்மைப்படுத்தப்பட்டது. அதற்கான சந்தர்பங்கள் அனைத்தையும் தென் இலங்கையும் ஊக்குவித்துக் கொண்டது. 1987 ஆண்டு இலங்கை-இந்திய உடன்படிக்கை கைத்சாத்தானதை அடுத்து எழுந்த முரண்பாடு பிராந்திய வல்லரசான இந்தியாவை நோக்கிய ஈழத்தமிழரது பார்வை மாற்றமடைவதற்கு வழிவகுத்தது. அத்தகைய மாற்றம் தமிழக-ஈழத்தமிழர் உறவாகவும் புதுடில்லி-ஈழத்தமிழர் உறவாகவும் மாறியது. இதில் நெருக்கமும், விரிசலும் மாறிமாறி செயல்பட ஆரம்பித்தது. அதன் நீட்சியாகவே சாந்தனின் மரணத்தை படுகொலை எனவும், இந்தியா துரோகமிழைத்தது எனவும் குற்றச்சாட்டுக்கள் மேலெழுகிறது. இத்தகைய குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை என்றும் விவாதிக்கப்படுகிறது. மகாத்மாகாந்தி (1947), இந்திராகாந்தி (1984), ரஜீவ்காந்தி(1991) ஆகிய மூன்று இந்தியத் தலைவர்களும் படுகொலை செய்யப்பட்ட துயரத்தை இந்தியாவின் அரசியல் இருப்பு எதிர் கொண்டுள்ளது. இக்கட்டுரையும் சாந்தனின் மரணம் ஈழத்தமிழரிடம் எழுந்துள்ள இந்திய எதிர்ப்புவாதத்தின் விளைவுகளை தேடுவதாக அமையவுள்ளது.
சாந்தனின் பூதவுடலை ஈழத்ததமிழர்கள் எதிர்கொண்டவிதம் தனித்துவமானது. வடக்கு முழுவதும் பெரும் துயரமாகவும் 2009 முன்பான நினைவுகளை மீள ஒருதடவை கண்டுகொள்ளக் கூடியதாகவும் அமைந்திருந்தது. விடுதலைப்புலிகள் காலத்தில் எவ்வாறு போராளிகளது பூதவுடல்கள் மதிக்கப்படுகிறதோ அதே போன்றதொரு பதிவை மீளவும் மனக்காட்சிகளுக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருந்தது. வடக்கின் ஒவ்வொரு நகரங்களிலும் மரியாதை செய்யப்பட்டவிதம் மீண்டும் ஒரு போராட்டகளத்தைத் தந்தது. இந்த மண்ணுக்கான சாந்தனின் ஈடேற்றமும் அத்தகைய போராட்டத்திற்கானது. இதனை ஒழுங்கமைத்த அனைத்துத் தரப்புக்களும் தங்களது பக்கத்தை நேர்த்தியாக மேற்கொண்டிருந்தனர். அரசியல்வாதிகளைளோ கட்சிகளையோ பிரதிபலிக்காது தமாகவே எழுச்சி பெற்று அத்தகைய நிகழ்வை ஈழததமிழர் வெளிப்படுத்தியிருந்தனர். இங்குதான் தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்துபவர்கள் அல்லது தமிழ் தேசியத்தை உதட்டளவில் உச்சரிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விடயமுள்ளது. தேசியம் என்பது சமானியரின் திரட்சி. அது அவர்களது யுகம். அத்தகைய சமானியரின் பங்களிப்பே தேசியமாகும். அதனையே சாந்தனுக்கு கொடுக்கப்பட்ட மரியாவை உணர்த்தியிருந்தது. சுயமாக மக்கள் வெளியே வந்தது மட்டுமல்லாது தமது உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
சமானியனது துயரம் நியாயமானது. இந்தியா மீது அவர்கள் அதிக விமர்சனங்களை வெளிப்படத்தினார்கள். அது ஒன்றும் தவறான புரிதலாகக் கொள்ள முடியாது. அதற்குள் இருந்த அரசியலைவிட அதற்குள் இருந்த உண்மை நியாயமானது. இந்தியா மீது சமானியன் வைக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் அரசியல்வாதிகளுக்கும் கருத்தியலாளர்கள் பலருக்கும் அதிக குழப்பங்கொண்டுள்ளனர். பல அரசியல்வாதிகள் சாந்தனின் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் தவிர்திருந்தனர். ஒரு சில அரசியல்வாதிகளை மட்டுமே நிகழ்வில் கண்டுகொள்ள முடிந்தது. மற்றவர்கள் எல்லோரும் இந்தியா கோபித்துவிடும் என்று கணக்குப் போட்டதாக தெரிகிறது. மக்களை நோக்கி அரசியலும் கருத்தியலும் கட்டமைக்கப்பட வேண்டுமே தவிர அரசியல் தேவைக்காக சமானியனது அபிலாசைகள் தோற்கடிக்க முடியாது. தென் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் அரசியல் செய்வதைவிடுத்து ஈழத்தமிழருக்கான அரசியலை இந்தியா நோக்கியும் தென் இலங்கை நோக்கியும் நகர்தும் துணிவு அரசியல்வாதிகளுக்கும் கருத்தியலாளர்களுக்கும் ஏற்படவேண்டும். தேசியம் ஒன்றும் மேட்டுக்குடியினது அபிலாசை கிடையாது. புலம்பெயர்ந்தவர்களது விருப்புக்கானது கிடையாது. கருத்தியலாளர்களின் சொத்தும் கிடையாது. அது புலத்திலுள்ள சமானியனது தேவைகளையும் நலன்களையும் தாங்கியது. சமானியனை நோக்கி கருத்துக்களையும் திட்டங்களையும் வடிவமைப்பதே அரசியலின் பொருத்தப்பாடு. 2009 களுக்கு பின்னும் ஈழத்தமிழர் தேசியத்தின் மீது கொண்டுள்ள பற்றுதியை கைவிடவில்லை என்பது சாந்தனின் நிகழ்வு வெளிப்படுத்துகிறது.
இந்தியா மீது ஈழத்தமிழர் முன்வைத்துள்ள விமர்சனம் நியாயமற்றதென்று கூறிவிட முடியுமா என்பது பிரதான கேள்வியாகும். சாந்தன் இந்தியாவுக்கு குற்றமிழைத்தவராக இருக்கலாம். ஆயுதப் போராட்டம் தற்போது இந்தியாவுக்கு விரோதமானதாக இருக்கலாம். ஆனால் 1980 களிலிருந்து வடக்கு கிழக்கு இளைஞர்களை ஆயுதப் போராட்டத்திற்குள் தள்ளியது இந்தியா என்பதை மறுக்க முடியுமா? பாக்குநீரிணைக்கூடாக ஆயுதங்களையும் போராட்டத்திற்கான பயிற்சிகளையும் வழங்கியது இந்தியா என்பதை மறுக்க முடியுமா? ஈழத்தமிழர் மத்தியில் தனிநாடு என்ற அபிலாசையை வளர்த்தவர்கள் இந்தியர்கள் என்பதை மறுக்க முடியுமா? கட்சி நலனுக்கும் சுயநலனுக்கும் ஆயுதப்போராட்ட அமைப்புக்களை பெருகவைத்ததோடு அவற்றுக்கிடையே மோதலை தூண்டிவிட்டது மட்டுமல்லாது அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை மறுதலிக்க முடியுமா? இந்திய தனது நலனுக்கு முரணாக ஈழவிடுதலைப் போராட்டம் நகரும் போது அதனை தென் இலங்கையுடனும் சீனா உட்பட உலக நாடுகளின் ஒத்துழைப்போடு இணைந்து அழித்ததை நிராகரிக்க முடியுமா? இது பழையதை நினைவுபடுத்துவதல்ல. அல்லது கிளறுவதல்ல. இதுவே ஈழத்தமிழர்-இந்திய வரலாற்றின் ஒரு பகுதி. இவையாவற்றையும் கடந்து இன்றும் ஈழத்தமிழர் இந்தியாவுடன் நட்புக் கொள்ளவும் உறவு வைத்தக் கொள்ளவும் இந்தியாவுக்கு விரோதமாக சீனாவுடன் கைகோர்காது செயல்படுவதற்கும் முனைகிறார்கள். சீனாவுடன் மட்டுமல்ல அமெரிக்காவுடனும் கூட்டுச்சேர தயாரில்லாத நிலையிலுள்ளனர். அதற்கு அடிப்படையில் இருக்கும் காரணங்களை இந்திய கொள்கைவகுப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் இல்லாத நிலையிலும் தமிழ் மக்கள் கடலில் இந்திய மீனவர்களுக்கு எதிராக போராடுவதுடன் சாந்தனின் நிகழ்வில் அரகளய போராட்டத்திற்கு சிங்கள மக்கள் திரட்டது போல் தமிழர்கள் திரட்சி பெற்றனர் என்பது இந்தியாவால் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இதில் மீனவர்களது போராட்டம் உலகம் முழுவதுமுள்ளது எனக்கூறிவிட்டு கடந்து செல்ல முடியாது. ஈழத்தமிழர் சிறிய தேசிய இனமாக இருந்தாலும் அவர்களது அமைவிடம் வரலாற்றில் மூலோபாயம் மிக்கது. பாக்குநீரிணை எனும் வலுவான கடல்பிரதேசத்தைக் கொண்ட அமைவிடத்தில் தமிழர்கள் இருப்பிடம் அமைந்துள்ளது. அத்தகைய இருப்பிடம் தமிழரிடமிருந்து பறிபோகுமாயின் இந்தியாவின் நிலைத்திருப்புக்கே ஆபத்தாகிவிடும். அது சீனர்களிடம் கிடைப்பதோ தென் இலங்கையிடம் கிடைப்பதோ விளைவு ஒன்றானதே. மீனவர் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண்பது அவசியமானது. வாழ்வாதாரத்தை இழக்கும் ஈழத்து மீனவ சமூகத்தை சீனா மீட்டெடுக்கும் அரசியலை வேகப்படுத்த வாய்ப்பு அதிகமானது. பேச்சுவார்தை மூலம் தீர்ப்பதற்கான வாய்ப்பு இன்னுமே உண்டு.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு 15 வருடங்களுக்குப் பின்னரும் ஈழத்தமிழர் சுயத்தோடு உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்பது கவனம் கொள்ள வேண்டிய விடயமாகும். இந்த மக்கள் திரட்சியின் வடிவம் சீனாவுடன் கைகோர்க்க அதிக காலம் எடுக்காது என்பதை இந்திய ஆட்சியாளர்கள் விளங்கிக் கொள்ளத் தவறக் கூடாது. இத்தகைய இந்திய எதிர்ப்புவாதம் கட்சிகளாலேயோ அல்லது திட்டமிடப்பட்ட குழுக்களாலேயோ அல்லது புலம்பெயர்ந்த தேசங்களின் அமைப்புக்களாலேயோ ஏற்படுத்தப்படவில்லை. இயல்பாகவே தமிழரிடம் எழுச்சி பெற்ற விடயம். இதற்கு யாரும் உரிமை கோரமுடியாது. காந்தியையும் நேருவையும் தமது வீடுகளில் உறவினராக வைத்து கொண்டாடியவர்கள், 1962 ஆம் ஆண்டு சீன-இந்திய போர் ஏற்பட்ட போது தமிழ் இளைஞர்களைத் திரட்டி இந்தியாவுக்கு உதவ முன்வந்த மக்கள் தற்போது இந்திய எதிர்புவாதத்தை வெளிப்படுத்துவதற்கான நியாயத்தை இந்திய ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
தமிழ் அரசியல் தலைமைகளை நிராகரித்துவிட்டு சிங்களத் தலைவர்களையும் பௌத்த துறவிகளையும் இந்திய அரசு அழைத்து உறவாடுவது மட்டுமல்லாது சீன சார்புக் ஆயுதப் போராட்ட அமைப்பாகவும் பின்னர் சீன சார்பு அரசியல் கட்சியான ஜே.வி.பி. இன் தலைமையை அழைத்து உறவாடியமையானது இந்தியா பக்கம் செயல்பட முனையும் ஈழத்தமிழரை அவமானப்படுத்துவதாகவே தெரிகிறது. பலதடவை இந்திய ஆட்சியாளரை சந்திக்க ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்த போதும் எந்த அழைப்பும் ஏற்க்காது தென் இலங்கை ஆட்சியாளரையும் சிங்களத் தலைவர்களையும் அழைத்து அரசியல் பொருளாதார கலாசார உறவு கொள்ள இந்தியா முனைகிறது. அதனை பற்றி உரையாடும் போது இது வழமைக்கு மாறான அழைப்புக் கிடையாது எனவும் தமக்கும் இலங்கைக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக விளக்கம் சொல்ல முனைகிறார்கள். அந்தக் காதல் ஒருதலைக்காதல் என்பதை வெகுவிரைவில் தென் இலங்கை வெளிப்படுத்தும். இதனை முன்னாள் இலங்கைக்கான இந்தியத்தூதுவர் ஜே.என். டிக்சித் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அவரது அனுபவத்திலிருந்து இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கற்றுக் கொள்ள தவறுகிறார்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது.
சாந்தனின் துயரமான நிகழ்வில் தமிழகத்திற்கும் பங்குண்டு. தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே வாக்கு அரசியலுக்காகவே ஈழத்தமிழர்களை பயன்படுத்திவருகிறது. முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட போரில் அதனை வெளிப்படையாக கண்டு கொள்ள முடிந்தது. அதனையே ராஜீவ்காந்தி படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களின் மீட்பிலும் நிகழ்ந்துள்ளதாகவே கருதத் தோன்றுகிறது. காரணம் அவர்களை மீட்பதற்க போராடியவர்களே அவர்களை சிறப்பு முகாமில் அடைத்துவைத்திருந்தார்கள் என்ற செய்தி தேர்தல் அரசியலையே நினைவுபடுத்துகிறது. தற்போது கூட அத்தகைய தேர்தல் அரசியலுக்கான களமாடல் தான் நிகழ்கிறதாகவே ஈழத்தமிழர் கருத இடமுண்டு.
எனவே ஈழத்தமிழரது இந்திய எதிர்ப்புவாதமானது ஈழத்தமிழருக்கு மட்டும் ஆபத்தானதல்ல. இந்தியாவுக்கும் ஆபத்தானதே. இதனை இந்திய தூதரகங்கள், இராஜதந்திரிகள்,வெளியுறவு கொள்கைவகுப்பாளர்கள் சரி செய்யத் தவறுவதன் விளைவு அபாயமானது. அத்தகைய விளைவு இலங்கைத் தீவு முழுவதும் சீனாவின் செல்வாக்குப் பிராந்தியமாக மாற்றமுறுவது தவிர்க்க முடியாததாகும். இந்திய எதிர்ப்புணர்வு விடுதலைப்புலிகள் இருந்த காலத்திற்கு நிகரானதாகவே உள்ளது. இதற்கு எதிராக இந்திய தரப்பினர் காழ்ப்புணர்வை வெளிப்படுத்துவதைவிட கையாளப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் விளைவுகள் பாரதூரமானவையாக அமையும். அது இலங்கை-இந்திய அரசியலுக்கு மட்டுமல்ல இந்துசமுத்திர அரசியலுக்கே மாற்றுவடிவத்தை ஏற்படுத்தும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-