
காலி மகும்புர தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (11) முதல் கால அட்டவணைக்கு அமைய மாத்திரம் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை காரணமாக பயணிகள் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என காலி மகும்புர தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பேருந்து சங்கத்தின் செயலாளர் நிலங்க சந்தருவன் தெரிவிக்கின்றார்.
டிசம்பர் 18, 2023 அன்று எங்களுக்கு வழங்கப்பட்ட அட்டவணையை நாங்கள் ஆட்சேபித்தோம். இது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இதனால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு எங்கள் வருத்தத்தைத் தெரிவிக்கிறோம்.
இதுவரை இந்த கால அட்டவணையில் இயக்காமல் பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கும் பணியில் ஈடுபட்ட குழுவாக உள்ளோம்.
எந்த நேரத்திலும் பயணிகளை காத்திருக்க வைக்காமல் பேருந்துகளை இயக்கினோம். ஆனால் எமக்கு ஏற்பட்டுள்ள இந்த சிரமத்தை தீர்க்க எந்தவொரு தரப்பினரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, இந்த அனைத்து பேருந்துகளும் உரிய நேரத்திற்கு மாத்திரம் இயக்கப்படும். இந்த கால அட்டவணையை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் 18ம் திகதி முதல் காலியில் இருந்து பேருந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்றார்