
இலங்கை தமிழரசுக் கட்சியின் லண்டன் கிளையின் நிர்வாக தெரிவுக் கூட்டமானது நேற்றையதினம் (10) லண்டனில் உள்ள பொதுநோக்கு மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

நிர்வாக தெரிவுக்கு முன்னர் திறந்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதன்பின்னர் நிர்வாக தெரிவு ஆரம்பமானது. இதன்போது தலைவராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் சொக்கநாதன் கேதீஸ்வரன் (கீத்) அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக பாலநந்தினி பாலசுப்பிரமணியம் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உப தலைவராகவும், பேச்சாளராகவும் திவாகரன் தியாகராஜா அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். உப செயலாளராக நிந்துஜா பிறேமதாசன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து இலண்டன் கிளையின் தலைவர் சொக்கநாதன் கேதீஸ்வரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை தமிழரசுக் கட்சியின் லண்டன் கிளையின் கூட்டம் மாதம் ஒரு தடவை நடைபெறும் எனவும், அடுத்த கூட்டத்தில் ஏனைய பதவிகளுக்கான தெரிவு நடைபெறும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த கிளையானது இலங்கை தமிழரசுக் கட்சியின் தாய்க் கிளையின் யாப்பின் அடிப்படையில் செயற்படும்.

அத்துடன் இலங்கையில் தமிழர் தாயகங்களின் அனர்த்தங்கள் ஏற்படும்போது அதற்கு உதவித்திட்டங்களை வழங்குவதற்கும், தமிழ் தேசிய சிந்தனையுடன் தமிழர்களின் அரசியல் தீர்வுகளுக்காகவும், தமிழர் தாயகங்களில் இடம்பெறும் அரச இயந்திரத்தின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் முகமாகவும், தமிழர்களது பிரச்சினைகளை பிரித்தானியா அரசிடம் எடுத்துச் செல்லும் நோக்குடனும் இந்த கிளை ஆரம்பிக்கபட்டுள்ளது.
அத்துடன் இந்த கிளையில் 7 குழுக்கள் உருவாக்கப்படவுள்ளன. அதாவது வைத்தியர்கள் குழு (9 பேர்), பொருளாதார வல்லுனர்கள் குழு (9 பேர்), அரசியலில் சிறப்புத் தேர்ச்சி பெற்றோர் குழு (9 பேர்), கணக்கீட்டாளர் குழு (9 பேர்), ஆலோசனையாளர் குழு (9பேர்), எண்ணக்கருவாளர்கள் (வரையறை இல்லை) ஊடகப் பணியாளர்கள் (வரையறை இல்லை) என ஏழு குழுக்கள் நியமிக்கப்படவுள்ளனர் – என்றார்.
