
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று ஆலயத்திற்குச் சென்றவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம்கொடுத்த நிலையில் காவல்துறையினர் அங்கு மேற்கொண்ட நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று(14) வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த சிங்கள தேசத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்தார்கள் என்பதை இல்லாது ஒழிப்பதற்காக பல்வேறு செயல் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இலங்கை அரசாங்கம் அதனுடன் சேர்ந்த திணைக்களங்கள் மற்றும் புத்த பிக்குகள் மிகவும் மோசமாக வன்முறையை உறுவாக்குவதற்காக எமது இனத்தை இல்லாது ஒழிப்பதற்குமான செயல்பாட்டை செய்து வருகின்றனர்.
இந்த நிலையிலே, தற்போது உச்ச கட்டமாக சிவராத்திரி அன்று வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் வழிபாட்டிற்காக சென்ற எம் உறவுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் மீது காவல்துறையினர் வன்முறையை உபயோகித்துள்ள நிலையில் இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது” என தெரிவித்துள்ளார்.