அரச சார்பற்ற மற்றும் சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான தேவை காணப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் UNDP யிடம் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான கூட்டுறவு அபிவிருத்தி பிரிவின் தலைமை அதிகாரி லின்டா எரிக், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். கௌரவ ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று (14.03.2024) இந்த சந்திப்பு நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகளுடன் அரச சார்பற்ற அமைப்புக்களின் உதவிகளும் தேவைப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவித்தார். சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் பின்னடைந்துள்ளதால் அதனை மீள ஒருக்கிணைப்பதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் உதவி புரிய வேண்டும் எனவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.
அத்துடன் மாகாணத்தில் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் காணப்படுவதுடன், அனைத்து அரச திணைக்களங்களையும் டிஜிடல் மயப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் கௌரவ ஆளுநர் கூறினார். இதேவேளை வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் கௌரவ ஆளுநர் எடுத்துக்கூறினார்.
விடயங்களை கேட்டறிந்துக்கொண்ட ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான கூட்டுறவு அபிவிருத்தி பிரிவின் தலைமை அதிகாரி லின்டா எரிக், அரச சார்பற்ற மற்றும் சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைக்கும் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews