மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட புணானை மேற்கு அணைக்கட்டு பகுதியில் உள்ள 6 நபர்களுக்குரிய காணியில் கிரவல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டு பாரிய குழியில் தோண்டி கிரவல் அகழப்பட்டு வருவதாக அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மற்றும் சிறுவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த காணிக்கு உரிமை கோரி ஆறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சுமார் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் அதிகளவான பகுதியில் கிரவல் தோண்டப்பட்டு பெரிய அளவிலான மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது குறித்த காணியில் பயன் தரும் மாம்பழம், மாதுளை மரம், மரவள்ளி போன்ற பயிர்கள் செய்கை பண்ணப்பட்டுள்ளது என சுமார் 30 பேர் கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த காணியில் பயிர் செய்கை பண்ணுவதற்காக முன்பு கடமையாற்றிய பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்ததுடன் தற்போது அரச காணியில் எவ்வாறு பயிர் செய்ய முடியும் என பிரதேச செயலாளர் கேட்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.
சந்திவெளியில் உள்ள ஒரு தனி நபருக்கு கிரவல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் கிரவல் அகழ்விற்கு எதிராக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.