வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏதேனும் அவசர நிலையின் போது தமிழ் மொழியில் முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய இலக்கமொன்றை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை இன்று (16) மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்படி 24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்கும் 107 என்ற இலக்கத்தின் ஊடாக தமிழ் மொழியிலும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் பதிவா தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் நேரடியாக பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவா தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலுக்கு அமைவாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரைகாலமும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அவசர தொலைபேசி இலக்கம் செயற்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழ் பேசும் மக்களுக்காக பிரத்தியேகமாக இவ் இலக்கம் அறிமுகப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.