வவுனியா சிறைச்சாலையில் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த கைதிகள் 5 பேரின் போராட்டம் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது
வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் 5 பேர் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி 5 பேர் கடந்த ஐந்து நாட்களாக சிறைக்குள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இவர்களின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. .
இந்நிலையில் இன்று மதியம் வவுனியா சிறைச்சாலைக்கு சென்ற மதகுருக்கள் மற்றும் அரசியில் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் விடுதலைக்கு தாங்கள் பொறுப்பு என குறித்த குழுவினர் வழங்கிய வாக்குறுதியினையடுத்து அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.