இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீஹர்ஷ வர்தன் ஷிரிங்லா திருகோணமலையிலுள்ள இந்திய பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு இன்று காலை விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்திய அரசுடன் இணைந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்கள் குறித்து பார்வையிடுவதற்காக திருகோணமலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு சென்று தாங்கிகளையும் பார்வையிட்டார்.
சீனக்குடா விமான நிலையத்தில் இன்று காலை 11 மணிக்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குறிப்பாக விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புடன் சீனக் குடாவில் உள்ள பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை சென்றிருந்தார்.
குறித்த நிக்ழ்வினை செய்தி சேகரிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் நிகழ்வு நடைபெறும் நுழைவாயில் கதவின் அருகில் கூட எந்தவொரு ஊடகவியலார்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் திருகோணமலை மாவட்டத்தின் முக்கிய இடங்களுக்கு நேற்று சில அமைச்சர்கள் வருகை தந்திருந்த நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருடைய பெற்றோலியக் கூட்டுத்தாபன வருகையின் போது அமைச்சர்கள் சிலர் வருகைதருவர் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் எவரும் சமூகமளிக்கவில்லை.