கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனை அபிவிருத்தி தொடர்பில் அண்மையில், ஒப்பந்தம் செய்து கொண்ட இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி, தற்போது ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, தொடர்ந்தும் 10 வது முறையாகவும் ஆசிய பணக்காரர்களில் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஒரு வருடத்தில் அதானியின் செல்வம் 1.04 லட்சம் கோடியிலிருந்து 5.05 லட்சம் கோடியாக நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்று ஆராய்ச்சி நிறுவனம் ஹுருன் இந்தியா தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை (WCT) அபிவிருத்தி செய்வதற்காக அதானி குழுமம் அதன் உள்ளூர் பங்குதாரர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் ஒரு பில்ட்-ஒபரேட்-டிரான்ஸ்பர் (பிஓடி) ஒப்பந்தத்தில் அண்மையில் கையெழுத்திட்டது
ஹுருன் இந்தியாவின் பணக்கார பட்டியல்படி, 2021 அதானி குழுமத்தின் ஒருங்கிணைந்த சந்தை மூலதனம் அல்லது பங்குகளின் மொத்த மதிப்பு 9 லட்சம் கோடி ரூபாவாகும்.
சீனாவில் உள்ள தண்ணீர் போத்தல் நிறுவனமான நோங்ஃபு ஸ்பிரிங் நிறுவனத்தின் நிறுவுனர் ஜாங் ஷான்ஷனை முந்தி அதானி ஆசிய பணக்காரர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அதானியின் சகோதரர்கள் வினோத் சாந்திலால் அதானியும், ஆசியாவின் முதல் 10 இடங்களில் 12 இடங்கள் முன்னேறி 8 வது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 1.31 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.