சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து வேறானதொரு அரச தொழில் முயற்சியாண்மையாக நிறுவ அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
இலங்கையிலுள்ள ஒரேயொரு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமான சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் 1969 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளுக்கான உள்ளுர் கேள்வியின் 25 சதவீதத்தினை அந்த நிலையம் பூர்த்தி செய்கின்றது.
அதனை மேம்படுத்தி, மேலும் 25 வருடங்கள் பயன்படுத்துவதற்காக குறிப்பிடத்தக்க முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்குத் தேவையான முதலீட்டை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் துறையினர் மூலம் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் வேறானதொரு அரச தொழில் முயற்சியாண்மையாக, சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது.