தென்பகுதியிலும் பார்க்க வடபகுதியில் அதிகளவான அழகிய சுற்றுலாத்தலங்கள் காணப்படுகின்றது. ஆனால் அவை அபிவிருத்தி செய்யப்படாமல் காணப்படுகின்றதாக வலையொளியாளர் திரு.அலஸ்ரின் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இருபத்து ஐந்து மாவட்டங்களுக்கும் முச்சக்கர வண்டியில் சுற்றுலா மேற்கொண்ட பின்னர் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களுக்கும் முச்சக்கர வண்டியில் சுற்றுலா சென்று விட்டு 37-வது நாட்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு திரும்பி உள்ளோம். கிட்டத்தட்ட 6000 கிலோ மீட்டர்களுக்கு மேலாக நமது பயணத்தை மேற்கொண்டிருந்தோம்.
வடபகுதியையும் பார்க்கிலும் தென்பகுதியில் அதிக சுற்றுலா பயணிகளை பார்க்கக் கூடிய மாதிரி இருந்தது. அந்த வகையில் வடபகுதியானது சுற்றுலா துறையில் பின்தங்கி இருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
நாங்கள் அங்கு பார்வையிட்ட இடங்களை விட எமது வடக்கு – கிழக்கில் அழகான இடங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் அதனை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு முன் வந்து செய்வதற்கு நாங்கள் யாருமே தயாராக இல்லை. அப்படி செய்தால் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை எமது பகுதிகளுக்குள் ஈர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
தற்போது இலங்கைக்கு அதிகமான வருமானத்தை ஈட்டி தருவது சுற்றுலா துறையாக தான் காணப்படுகின்றது. சுற்றுலாத்துறையால் இதனை மாற்ற முடியும் என நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் சுற்றுலா துறையால் ஒரு வரலாற்றையே மாற்றுவதற்கு முடியும்.
தென்பகுதிக்கு நாங்கள் செல்லும்போது அங்கே சுற்றுலா வழிகாட்டி ஒருவர் இருப்பார். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குறித்த இடத்திற்கு வருகை தந்து சுற்றுலாத்தலங்கள் பற்றி கேள்வி எழுப்பும் போது குறித்த வழிகாட்டி அதற்கு பதில் அளிப்பதை முழுமையாக நம்பிக் கொண்டு அவர்கள் அடுத்த தலைமுறைக்கு அதனை கொண்டு சேர்ப்பார்கள். அதேபோல நாங்கள் வடபகுதியில் உள்ள வரலாற்று சின்னங்களையும், அடையாளங்களையும் பாதுகாத்து, சுற்றுலா பயணிகளை கவர்ந்து அவர்களிடத்து நமது வரலாறுகளை கடத்தக்கூடிய ஒரு சக்தி சுற்றுலாத்துறைக்கு இருக்கின்றது.
சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கு பல விடயங்களை முன்னெடுப்பதற்கு நாங்களும் ஆவலாக இருக்கின்றோம். தற்போது நாங்கள் இலங்கையின் அனைத்து மாவட்டங்களுக்கும், எந்தவிதமான தடைகளும் இன்றி இலகுவாக செல்லக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது. புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகளும் எமது நாட்டுக்கு வருகை தந்து எமது நாட்டின் சுற்றுலா தளங்களை பார்வையிடுவதன் மூலம் நமது நாட்டு அந்நிய செலாவணியும் அதிகரிக்க கூடிய வாய்ப்பு இருக்கின்றது என்றார்.