நீதிமன்ற உத்தரவை மீறி, சமய வழிபாடுகளை நடத்தியதாக குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட எட்டு தமிழ் சைவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க பொலிஸாரிடம் போதிய ஆதாரம் இன்மையால், நீதிமன்றத்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டதோடு, வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தவறியதால், இராசரத்தினம் விநாயகமூர்த்தி (30), சுப்பிரமணியம் தவபாலசிங்கம் (35), துரைராசா தமிழ்ச்செல்வன் (28), மகேந்திரன் நரேந்திரன் (29), சிவம் லக்ஷான் (28), கந்தசாமி கௌரிகாந்தன் (24), திலகநாதன் கிந்துயன் (28) மற்றும் ஆலய பூசாரி தம்பிராசா மதிமுகராசா (45) ஆகியோரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டாலும் அநீதிக்கு எதிரான தமது போராட்டம் தொடரும் என சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் நேற்று (மார்ச் 19) வவுனியா மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
“இன்று குற்றப்பத்திரிகையை முன்வைக்க வேண்டிய பொலிசார் முன்வைக்காத காரணத்தினால், நீதிமன்றத்தில் நாங்கள் காரசாரமான வாதங்களை முன்வைத்தோம். ஏற்கனவே சந்தேகநபர்களை கைது செய்து முறைப்பபாட்டை தேடிய பொலிஸார் தற்போது குற்றத்தை தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆகவே இதுவொரு அடிப்படையற்ற வழக்காக காணப்படுகின்ற காரணத்தினால், அவர்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கேட்டிருந்தோம். எங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு வழக்கில் இருந்து சந்தேகநபர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அநீதிக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும்.”
வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள வெடுக்குநாரிமலையில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த மார்ச் 8ஆம் திகதி இரவு சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த எட்டு தமிழர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தொல்லியல் சட்டத்திற்கு அமைய, மாலை 6 மணிக்கு மேல் அப்பகுதியில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட முடியாது எனத் தெரிவித்த பொலிஸார், அவர்கள் அறிவுறுத்தல்களை மதிக்கவில்லை எனக் குற்றம் சாட்டி கைது செய்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட எட்டு பேரையும் உடனடியாக விடுவிக்கக் கோரி வடக்கு மற்றும் கிழக்கில் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், எட்டு சைவர்களையும் பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்த பொலிஸார், நீதிமன்றத்தையும் தவறாக வழிநடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தியிருந்தனர்.
பூஜை வழிபாடுகளின்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் தாக்கப்பட்டதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
எட்டு சைவ பக்தர்களையும் விடுவிக்கக் கோரி, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நேற்று (மார்ச் 19) நாடாளுமன்றத்தில் போராட்டம் ஒன்றை நடத்தியதுடள், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்திருந்தார்.
வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் என வட மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் அழைக்கும் இத்தலம் வட்டமண கல் விகாரை என அழைக்கப்படுவதாக சிங்கள பௌத்தர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது.