யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு நாளை யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பொன்று இந்து கற்கைகள் பீட பீடாதிபதி ச.பத்மநாபன் தலைமையில் இன்று நடைபெற்றது.
“இந்துக் கற்கைகள் பாரம்பரியமும் இலங்கையரும்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடம் நடாத்தும் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு (IHC) – 2023 நாளை வியாழக்கிழமை (21) காலை 9 மணிக்கு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இதன் போது பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா கலந்துகொள்ளவுள்ளதுடன் குறித்த மாநாட்டில் 54 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இந்து கற்கைகள் பீடச்சபையின் ஏகோபித்த ஆதரவுடன் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தின் பிரதம குருவாக இருந்து தேகாந்த நிலையை அடைந்த அமரர் கு.நகுலேஸ்வர குருக்களுக்கு மெய்ப்பொருள் விருதும், சைவ சமூக பணியாற்றும் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகனுக்கு ஞானவாய்ச்சியன் விருதும், இலங்கையில் இந்து பண்பாட்டுக்கு உழைக்கும் அகில இலங்கை இந்து மாமன்றத்திற்கு சிவநிதி விருதும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டில் இந்த ஆய்வு மாநாடு நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும்.